அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத சில விடயங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்வதற்கு தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
உதாரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத போக்குவரத்து பொலிஸ் விடயங்கள் மற்றும் முகாமைத்துவம் நிர்வாகம் போன்ற விடயங்களுக்கான பொலிஸ் விடயங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வைத்துள்ள விடயங்கள் குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. காரணம் அவரின் அரசியல் கதாபாத்திரம் எமக்குத் தெரியும். ஆனால் அவர் இனப்படுகொலை என்ற விடயத்தை பயன்படுத்தியுள்ளார். எனவே அது தொடர்பில் எமது வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கை எடுககும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண ஆளுநர் கைச்சாத்திடவேண்டியது அவசியமாகும். ஆனால் மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்கள் விடயத்தில் மாகாண ஆளுநர்கள் கையொப்பமிடமாட்டார்கள். காரணம் மாகாண சபைகளில் பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அது யதார்த்தமற்ற விடயமாகும்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாக மிகவும் அவசரமான முறையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. யாரிடமும் கலந்தாலோசிக்காத வகையிலேயே இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
இந்நிலையில் 2009 யுத்தம் நிறைவடைந்தது. அதன் பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் உருவாகியது. அதாவது 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமான நிலைமை உருவாகியது.
ஆனால் அரசியலமைப்பு என்பது கற்களால் பொறிக்கப்பட்டதல்ல. அது காலத்துக்கு காலம் அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றமடையலாம். அதுதான் ஜனநாயக செயற்பாடாகும். இந்தியாவின் அரசியலமைப்பு 157 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போதைய நிலைமையில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அரசாங்கம் கருதுகின்றது. பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு உகந்த விடயமல்ல.
அதாவது மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்பதனை மிகவும் தெளிவான முறையிலும் திட்டவட்டமாகவும் குறிப்பிடுகின்றோம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள விடயம் என்பதால் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லதாத சில விடயங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்வதற்கு தயாராக இருக்கின்றது. இது தொடர்பில் சிந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இதுவரை இந்த விடயம் குறித்து அரசாங்கம் சிந்திக்கவில்லை. ஆனால் தற்போது சிந்திக்க தயாராக இருக்கின்றோம்.
கேள்வி : பொலிஸ் அதிகாரத்தில் உள்ள எவ்வாறான விடயங்களை வழங்க தயார்?
பதில்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத போக்குவரத்து பொலிஸ் விடயங்கள் மற்றும் முகாமைத்துவம் நிர்வாகம் போன்ற விடயங்களுக்கான பொலிஸ் விடயங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்பதனை தெளிவான முறையில் குறிப்பிடுகின்றோம். உதாரணமாக பொலிஸ் ஆணைக்குழு பிரதி பொலிஸ் மா அதிபரை முதலமைச்சர் நியமிப்பது போன்ற விடயங்களை வழங்கவே முடியாது.
கேள்வி : மனித உரிமைப் பேரவையின் பிரேரணை சம்மந்தப்பட்ட விடயங்களினால் இவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றதா?
பதில்: மனித உரிமைப் பேரவையின் பிரேரணை விடயத்துக்கும் இந்த 13 ஆவது திருத்தச் சட்ட விடயத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.
கேள்வி : இவை தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே ஆராய்கின்றதா?
பதில் : இல்லை. ஆராய்வதற்கு தயாராக இருக்கின்றது.
கேள்வி : தமிழக முதல்வர் ஜெயவலலிதாவின் நகர்வு தொடர்பில்?
பதில்: இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நநேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்வைத்துள்ள விடயங்கள் குறித்தும் நாம் ஆச்சரியப்படவில்லை. காரணம் அவரின் அரசியல் கதாபாத்திரம் எமக்குத் தெரியும். ஆனால் அவர் இனப்படுகொலை என்று ஒரு வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் . இது பொதுவாக ஜனநாய செயற்பாட்டில் பயன்படுத்தப்படாத விடயம். இது குறித்து நாங்கள் பார்க்கின்றோம்.
எவ்வாறெனினும் நரேந்திர மோடிக்கு வலுவான அரசாங்கம் உள்ளது. அவருக்கு மாநில கட்சிகளின் ஆதரவு அவசியமில்லை. இதற்கு முன்னர் மாநிலக் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டபோதுகூட மத்திய அரசாங்கம் இலங்கையுடன் நல்லுறவை பேணியது. மாநிலக் கட்சிகளின் சில விடயங்களை மத்திய அரசாங்கம் செவிமடுக்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஒருவிதமான அழுத்தங்கள் இருந்தன. எனினும் தற்போதைய நிலைமை வேறாக உள்ளது. மத்தியில் மோடி வலுவான அரசாங்கத்தை கொண்டுள்ளார்.
கேள்வி : மோடி இலங்கையின் பக்கம் இருப்பார் என்று கருதுகின்றீர்களா?
பதில் : அவர் சரியான நிலைப்பாட்டின் பக்கம் இருப்பார்.
கேள்வி : ஜெயலலிதாவின் விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளாரே?
பதில்: சர்வதேச மேடைகளில் எதனையும் உடனடியாக நிராகரிக்க முடியுமா?
கேள்வி : ஜெயலலிதாவின் கருத்துக்களுக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிடுமா?
பதில்: ஜெயலலிதா இனப்படுகொலை என்ற விடயத்தை பயன்படுத்தியுள்ளார். எனவே அது தொடர்பில் எமது வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கை எடுககும் .இது ஆழமாக பார்க்கப்படவேண்டிய விடயமாகும். உண்மையில் பிரிவினைவாதத்துக்கு எதிராக இந்தியா குரல்கொடுத்துவருகின்றது.
கேள்வி : ஒருவேளை மோடிக்கு வலுவில்லாத அரசாங்கம் அமைந்து தமிழகம் மூலம் அழுத்தங்கள் வரும் என்று அரசாங்கம் அஞ்சியதா?
பதில் : இலங்கை அரசாங்கம் வலுவானதாக செயற்படுவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் வலுவானதாக இருக்கவேண்டியது அவசியமாகும். அந்தவகையில் தற்போது சிறந்த நிலைமையில் இருக்கின்றோம்.
கேள்வி : நரேந்திர மோடிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தாலும் ராஜ்யசபையில் ( மேல் சபை) பெரும்பான்மை இல்லை. எனவே அவர் மாநிலக் கட்சிகளின் சட்டவாக்க விடயங்களில் தங்கியுள்ளாரே?
பதில் : ஆனால் முன்னர் இருந்ததைவிட தற்போது சிறந்த வலுவான இடத்தில் இருப்பது சிறந்த விடயமாகும்.
















