காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அரசியல் செய்வதாக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் இருந்து பெற்றுத்தர மு.க.ஸ்டாலின் தயாரா? கவர்னர் மாளிகைக்கு நடப்பதை விட்டுவிட்டு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் காவிரி விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது சட்ட ரீதியாக கையாளப்பட்டு வருகிறது. இதில் நிரந்தர தீர்வு காணவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், தமிழக அரசு தமிழகத்தில் காவிரி அணைகளில் உள்ள உரிமைகளை விட்டுத்தர வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு தயாரா? என சட்ட மந்திரி சி.வி.சண்முகம் பதில் அளிக்க வேண்டும். அவர்கள் அரசியல் செய்கிறார்களா? நாங்கள் அரசியல் செய்கிறோமா? .

மத்திய அரசை பொறுத்த வரை காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!