அரசாங்கத்தின் உறுதியற்ற கருத்துக்களை நம்பி ஏமாறத் தயாரில்லை. அரசாங்கம் குறிப்பிடும் பொலிஸ் அதிகாரத்திற்கு இணங்கவும் மாட்டோம்,ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மாகாண சபையை பலவீனப்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டினையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் செய்யாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் அதிகாரத்திலும் விட்டுக்கொடுப்பிற்கு தயார் என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் வினவிய போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி.மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் அதிகாரப் பகிர்வினையும், மாகாண அதிகாரங்களையும் கொண்டு வருவது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கே தவிர எவரினதும் தனிப்பட்ட சுயநலன்களுக்காக அல்ல. இனக் குழுமத்தின் அடிப்படையில் அதிகாரங்களை பகிரத்தயாரில்லை என அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தது. பொலிஸ் அதிகாரத்திலும் விட்டுக்கொடுப்புக்குத் தயார் என தற்போது குறிப்பிடுகின்றனர். அரசாங்கம் தனது முடிவினை உறுதியாகவும், தெளிவாகவும் குறிப்பிட வேண்டும். சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கேற்ப ஊடகங்களை சமாளிக்கும் கருத்துக்களை நம்பி செயற்பட நாம் தயாரில்லை.
எவ்வாறான அதிகாரங்களை வழங்குவது என்பதை அரசாங்கம் தீர்மானித்து விட்டது. 13ஆவது திருத்தத்தை விடவும் குறைவான அதிகாரங்களை கொண்டு சமாளிக்கும் இவ்வகையான கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவும்மாட்டோம். அவற்றிற்கு இணக்கம் தெரிவிக்கவும்மாட்டோம்.
மேலும் அரசாங்கம் நாட்டு மக்களை திருப்திப்படுத்த 13ஆம் திருத்தத்தை செயற்படுத்தமாட்டோம் என குறிப்பிடுகின்றனர். எனினும் சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் அதிகார பகிர்விற்கு செல்வதாக தெரிவிக்கின்றது. இவ்வாறு நாட்டையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றது. 13ஆவது திருத்தத்தினை பலப்படுத்த வேண்டுமே தவிர அதனை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை தமிழ் மக்கள் விரும்பவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ் விடயத்தில் மிகத் தெளிவாக உள்ளது. அரசாங்கம் தரும் சொற்ப அதிகாரங்களின் மூலம் வடக்கில் விடுதலையினை பெற முடியாது.
இவ்வாறு அர்த்தமற்ற பேச்சுக்களை நம்பி 13ஆவது திருத்தத்தினை பலப்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.
















