பூவே பூச்சூடவா படத்தில் வரும் பாட்டி பேத்தி கதையை உல்டா செய்து தாத்தா பேரன் கதையாக மாற்றத் தெரிந்த இயக்குனருக்கு அந்த படத்தில் இருக்கும் அழுத்தமான திரைக்கதையை காப்பியடிக்க தெரியவில்லை. வீக்கான திரைக்கதை, திருப்பங்கள் இல்லாத காட்சிகள், மொக்கையான வசனங்கள் என வெறும்பையாக இருக்கிறது இந்த மஞ்சப்பை.
ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பேரன் விமல் கண் டாக்டர் லட்சுமி மேனனை காதலிக்கிறார். காதல் ஒருவழியாக ஒழுங்காக சென்றுகொண்டிருக்கும்போது ஊரில் இருந்து பேரனைப் பார்க்க தாத்தா ராஜ்கிரண் சிட்டிக்கு வருகிறார். அவர் செய்யும் சில அப்பாவித்தனமான விமலுக்கு எதிராக முடிகிறது. இதனால் ஹீரோயின் லட்சுமி மேனனுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. ஹீரோ குடியிருக்கும் அபார்ட்மெண்டில் அனைவரது வெறுப்பை சம்பாதிக்கும் தாத்தா ராஜ்கிரண், பின் எவ்வாறு ஒவ்வொருவரின் மனதையும் கவர்கிறார் என்பதுதான் கதை.
தமிழ் சினிமாவில் எந்த ஒரு உணர்ச்சியையும் தன் முகத்தில் காட்டத்தெரியாத ஒரு ஹீரோ இருக்கின்றார் என்றால் அது விமல்தான் என்று சின்னக்குழந்தை கூட சொல்லிவிடும். காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் லட்சுமி மேனனுக்கு ஈடுகொடுத்து நடிப்பதில் மிகுந்த சிரமப்படுகிறார். இப்படியே போனால் விமல் தேறமாட்டார் என்ற முடிவுக்கு கோலிவுட் வந்துவிடும்.
லட்சுமி மேனன் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. பாடல் காட்சிகளில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருந்தாலும், படம் முழுவதும் ஹோம்லி லுக்கில் வந்து அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.
படத்தின் உண்மையான ஹீரோ ராஜ்கிரண்தான். அப்பாவி தாத்தாவாக வருவதும், கள்ளங்கபடமில்லாமல் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் ரசிக்கும்படி இருக்கிறது. கிராமத்து பாசத்தை மிக அழகாக வெளிப்படுத்தி அசத்தி விடுகிறார். இனி இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இயக்குனர் நவீன் ராகவன் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். இசையும் இவரேதானாம். பாடல்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ராஜ்கிரணுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
















