தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வு என்ன என்று தமிழ் மக்களும் தமிழர்களின் பிரதிநிதிகளும் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில், உக்கி உளுத்துப்போயிருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என்று இந்தியாவின் புதிய பிரதமர் மோடி பதிலளித்திருக்கின்றார். ஆறாத வடுக்களுடனும் வலிகளுடனும் படுக்கையில் துடித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு சிறந்த வலி நிவாரணியை மோடி தருவார் என்று எதிர்பார்த்திருந்தவேளை அவர் வந்ததும் வராததுமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு மகிந்தவிடம் கேட்டிருக்கின்றார். இது தமிழ்த் தேசியவாதிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றது.
60 ஆண்டு காலமாக புரையோடிப்போயிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வாக அமையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழீழத் தேசியத் தலைவருமான வே.பிரபாகரன் உள்ளிட்ட தமிழர்களின் பிரதிநிதிகளும் தமிழ் மக்களும் நிராகரித்த நிலையில் அதையே தீர்வாக கொள்ளுங்கள் என்று தமிழ் மக்களிடம் திணிக்க முற்படுகின்ற இந்தியாவின் பிந்திய நிலைப்பாடு தொடர்பாக தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடியின் பதவியேற்பு இதுவரை இல்லாத இந்தியப் பிரதமர்களின் பதவியேற்பு விதிகளுக்கு அப்பாற்பட்டு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்த கொங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் பாரதீய ஜனதா கட்சி தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டது. இதன்மூலம் எதிர்க்கட்சியின் கேள்விகள் எதுவுமின்றி ஆட்சி நடத்தக்கூடிய நிலையன்று ஏற்பட்டுவிட்டது. இந்தியாவின் ஆட்சி எப்படி நடைபெறுகின்றது என்பது ஒரு பக்கத்தில் இருக்க, இந்தப் புதிய அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளை எப்படிக் கையாளப்போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்தியாவில் இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விடயத்தில் கையாண்ட கடினத்தன்மை காரணமாகவே தமிழ் மக்கள் இன்று நட்டாற்றில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. கொங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்றும் அதற்கு பழிவாங்க வேண்டும் என்ற காரணங்களுக்காகவே கொங்கிரஸ் கட்சி புலிகளை அழிப்பதற்கு சிறீலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது என்பதும் பல அரசியல் ஆய்வாளர்களாலும் கூறப்பட்ட கருத்தாக உள்ளது. இந்தக் கருத்தின் உண்மைத்தன்மையை நாம் ஆராய முற்பட்டால் ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றார்களா என்பதையும் ஆராய வேண்டும். புலிகள் மட்டுமே இது தொடர்பாக பதிலளிக்கவேண்டியவர்கள்.
ஆனால், புலிகள்தான் ராஜீவைக் கொன்றார்கள் என்பது உண்மையாயின் அதில் ஈடுபட்ட ஓரிருவருக்கு தண்டனை கொடுப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதற்காக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஒட்டுமொத்த வீரர்களையும் அழிப்பது, தமிழ் மக்களின் அரச கட்டமைப்புகளை தகர்த்தழிப்பது, அனைத்தையும் உடைத்தெறிவது, இருந்த இடமே தெரியாமல் துடைத்தழிப்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தண்டிப்பது என்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதையே கொங்கிரஸ் செய்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. அது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். வன்னியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை தேர்தல் முடிவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. கொங்கிரஸின் ஆட்சி மாறினால் அன்றைய தினமே தமிழ் மக்களின் போராட்டம் காப்பாற்றப்படும் என்பதே தமிழ் மக்களினதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினதும் எதிர்பார்ப்பாக அமைந்தது. ஆனால், மீண்டும் கொங்கிரஸ் ஆட்சி அமைந்ததால் அனைத்தும் தலைகீழாக மாறியது.
கொங்கிரஸ் தலைவி சோனியாவோ அவரின் வாரிசான ராகுல் காந்தியோ கொங்கிரஸின் மூத்த தலைவர்களோ தமிழ் மக்கள் தொடர்பில் எந்த இரக்கமும் காட்டவில்லை. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது கொங்கிரஸ் தலைவி சோனியா காந்தியோ அவரின் கைப்பொம்மைப் பிரதமர் மன்மோகன்சிங்கோ வாய் திறக்கவில்லை. மாறாக சிறீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் அழிப்பில் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் அன்று செய்த அதே பாவத்திற்காக அடுத்த தேர்தலில், கடந்த மே மாதம் அவர்களின் முடிவு அறிவிக்கப்பட்டது. இனிமேல் இந்தியாவில் கொங்கிரஸ் கட்சி தலைதூக்காது என்ற அளவுக்கு படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. இதுவே அனைவருக்குமான பாடமாக அமையவேண்டும். தமிழ் மக்களின் அழிவில் திருப்தியடைந்த அனைவருக்கும் இனிமேல் இதே நிலைதான் என்பதை உணரவேண்டும்.
சரி, கொங்கிரஸ் ஆட்சிதான் தமிழ் மக்களுக்கு அடிப்படையில் மோசமான ஆட்சியாக அமைந்தது என்று கூறினால், பாரதீய ஜனதாவின் ஆட்சி எப்படி அமையப்போகின்றது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கின்றது. ஆனால், இந்த எதிர்பார்ப்பிற்கு பதவியேற்பு அன்றே மோடி ஒரு பதிலை வெளிப்படுத்தியிருக்கின்றார். அதுதான் 13 ஆவது திருத்தச் சட்டம். இந்த திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மோடி பதவியேற்பன்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியிருக்கின்றார். இது தமிழ்த் தேசியவாதிகளுக்கு, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நீதியான தீர்வை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பலத்த ஏமாற்றமாக அமைந்திருக்கின்றது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சிறீலங்காவின் அரசியல் யாப்பிற்கான 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிறீலங்கா அரசியல் யாப்பின் 17 ஆம் அத்தியாயத்தின் ‘அ’ பிரிவாகவும் உறுப்புரை 154 ‘அ’ பிரிவாகவும் இந்த திருத்தம் சேர்க்கப்பட்டது. அதேவேளை, மாகாண சபை முறைமைகள் நடைமுறைச் செயற்பாடுகளுக்கான 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டமும் இதே தினத்தில் நிறைவேற்றப்பட்டது. எனவே, மாகாண சபைகள் அரசாங்க முறைமையானது இலங்கை இந்திய ஒப்பந்தம், 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைகள் சட்டம் என்பவற்றின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகின்றது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையானது தமிழ் மக்களின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்டதல்ல. அப்போதைய சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அமெரிக்காவுடனும் மேற்குலக நாடுகளுடனும் கொண்டிருந்த வலுவான உறவானது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதிப்பாக அமைந்தது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்பட்டது. சிறீலங்கா – அமெரிக்க உறவுகள் தொடர்ந்தால் அது தனது எதிர்கால நலன்களுக்கு பாதிப்பாக அமையுமென்று இந்தியா கருதியது.
இதனால்தான் இந்தியா அப்போது விடுதலைக்காக போராடிய தமிழ் தரப்புகளை இந்தியாவிற்கு அழைத்து தங்கவைத்து, சுதந்திரமாக உலாவ விட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளும் கொடுத்து சிறீலங்காவில் பிரச்சினையைத் தோற்றுவித்தது. சிறீலங்காவில் பிரச்சினை தொடர்ந்து இருந்தால் அந்தப் பிரச்சினையில் பெயரால் தான் தொடர்ந்தும் சிறீலங்காவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தலாம் என்று கருதிய இந்தியா தமிழர் நலனில் அக்கறை காட்டுவது போல வேடமிட்டது. இந்த வேடத்திற்கு ஏற்பவே 13 ஆவது திருத்தச் சட்டம் என்ற முறைமையைக் கொண்டுவந்தது. இது சிறீலங்காவில் தனது செல்வாக்கை தக்க வைப்பதற்காகவும் தீர்வு என்ற பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும் கொண்டுவரப்பட்டது.
1987 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டம் தீவிரம் தோற்றம் பெற்று வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த காலம். தமிழீழம் ஒன்றே இலக்கு என்று தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்தை வலுப்படுத்திய காலம். எனவே, அரைகுறைத் தீர்வு ஒன்றைக் கொண்டுவந்தால் அதைத் தமிழீழத் தேசியத் தலைவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரியும். பிரபாகரன் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார். அதன் மூலம் பிராந்தியத்தில் தனது நலன்களை தக்கவைக்கலாம் என்ற தந்திரத்தின் அடிப்படையிலேயே இந்தியா அப்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அதில் தற்காலிக ஏற்பாட்டின்படி வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. இதற்கு முதலமைச்சராகுமாறு தலைவர் பிரபாகரனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், அடிப்படையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்த தலைவர் பிரபாகரன் அதனடிப்படையில் அமைந்த மாகாண சபைக்கு முதலமைச்சராக இருப்பதற்கு மறுத்துவிட்டார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை புலிகள் எதிர்த்தது போலவே, அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கம் வகித்த இன்றைய இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்க்ள எதிர்த்தார்கள். இது தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று அவர்கள் உடனடியாகவே இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். ஆனால், இவர்கள் யாரின் கருத்துக்களையும் இந்தியா செவிமடுக்கவில்லை.
இதில் குறிப்பிடக்கூடிய விடயம் என்னவென்றால், யாருடைய பிரச்சினைக்கு தீர்வாக இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை இந்தியா கொண்டுவந்ததோ அது தொடர்பாக அந்த தரப்புகளுடன் கலந்துரையாடவில்லை. குறிப்பாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் அப்போது (1987) தமிழ் மக்களின் வலுவான பிரதிநிதிகளாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனோ அல்லது அரசியல் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியுடனோ இந்திய அதிகாரிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல் குறிப்பாகச் சொன்னால், அவர்களுக்கு தெரியாமல் 13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தயாரித்து அதை நடைமுறைப்படுத்த தொடங்கியது. இந்தியாதான் இது தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடவில்லையென்றால் குறித்த திருத்தத்தை தனது அரசியலமைப்பில் இணைத்துக்கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன அரசும் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தங்களுக்குச் சாதகமாக கொண்டுவந்த பிரேரணைபோன்ற திருத்தத்தை அரசியலமைப்பில் இணைத்து அதுவே தீர்வு என்றனர்.
1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்தத் திருத்தச் சட்டம் இன்று மேலும் வலுவிழந்துள்ளது. குறிப்பாக, 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பல அதிகாரங்கள் சிறீலங்கா அரசாங்கத்தால் வலுவற்றதாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் கொண்டுவந்த திவிநெகும சட்டத்தின் மூலம் 13 ஆவது திருத்தத்திலிருந்த பல அதிகாரங்கள் இல்லாமற்செய்யப்பட்டுள்ளன. கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வு என்று இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்துவது தமிழ் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு உண்மையான தீர்வாக இருந்திருக்குமாயின் அது கொண்டுவரப்பட்ட 1987 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 650 போராளிகளும் நூற்றுக்கும் குறைவான பொதுமக்களுமே விடுதலைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்திருந்தனர். ஆனால், அந்த தீர்வை நிராகரித்து தற்போது 30 ஆயிரம் வரையான மாவீரர்களையும் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்களையும் விடுதலைக்காக இழந்த பின்னர் மீண்டும் அதே 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு என்று திணிப்பதன் மூலம் இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தருகின்ற நிலைப்பாட்டில் இல்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. தனது பிராந்திய நலன்களுக்காகவே மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக இந்தியா தமிழ் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.
தமிழ் மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நிற்கின்றார்கள் என்பது தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உட்பட தமிழகத்தில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடுகின்ற தலைவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இது ஒரு வரலாற்றுக் காலம். இந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதும் முக்கியமானது. இன்று இருப்பது போன்று ஈழத்திலோ தமிழகத்திலோ எந்தத் தலைவர்களும் நாளை உருவாக மாட்டார்கள். வைகோ, பழ.நெடுமாறன் ஐயா, சீமான், திருமாவளவன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களும் தமிழின உணர்வுள்ள ஏனைய தலைவர்களும் ஈழத் தமிழர்களுக்காக வீதியில் இறங்கிக் குரல்கொடுக்கின்ற மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நாளை உருவாகுவார்கள் என்றில்லை.
எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான களநிலையை இந்திய மத்திய அரசுக்கு ஏற்படுத்துவது இவர்கள் அனைவரதும் கடமை. உக்கி உளுத்துப்போன 13 ஆவது திருத்தச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களினதும் 2 இலட்சம் வரையான பொதுமக்களினதும் தியாகத்திற்கு நிகரான தீர்வை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
-தாயகத்தில் இருந்து காந்தரூபன், நன்றி: ஈழமுரசு
















