முள்ளிவாய்க்கால் பாவத்தை கழுவ இராணுவத்துக்கு சந்தர்ப்பம் வழங்கிய வற்றாப்பளை ஆலய பரிபாலன சபையினர்!

kilinochchi_murukanவரலாற்றுப்பெருமை மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா நாளை மறுநாள் அதாவது எதிர்வரும் 09.06.2014 திங்கள் கிழமை அன்று இடம்பெறவுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல இலட்சம் மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வற்றாப்பளை ஆலயத்தின் உள் மற்றும் வெறிப்புறச்சூழல்களை தூய்மைப்படுத்தும் சிரமதானப்பணிகளிலும், ஆலய வழிபாட்டுக்கு வருகை தரவுள்ள பக்தர்களை வசதிப்படுத்தும் வேலைகளிலும் இராணுவத்தினர் பெருமளவில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஆலயத்தை கழுவி கூட்டிப்பெருக்கும் உட்புற வேலைகளிலும், வெளிப்புறச்சூழலில் ஆங்காங்கே குடிநீர் வசதிகளுக்கான தண்ணீர் தாங்கிகளை (Plastic Water Tanks) நிறுவுதல், தாக சாந்தி மற்றும் அன்ன தான பந்தல்களை அமைத்தல், தீ மற்றும் சிறு விபத்து காயங்களுக்கான முதலுதவி சிகிச்சை நிலையங்கள், மருத்துவ முகாம்களை நிறுவுதல் என்று ஆலய சூழல் முழுக்கவும் இராணுவ மயப்பட்டு கிடக்கின்றது.

09.06.2014 திங்கள் கிழமை அன்று கோபுர கலசத்துக்கு சிறீலங்கா விமானப்படையினர் உலங்குவானூர்திகள் மூலம் மலர் தூவுவதற்கான ஏற்பாடுகளும் தடல்புடலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இச்செயல்பாட்டால் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ள சமுக ஆர்வலர்களில் ஒருவர், இது தொடர்பில் ஆலய பரிபாலன சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரிடம் தனது விசனத்தை வெளிப்படுத்திய போது,

அதற்கு அவர், “பெரிய இடமா இருக்கிறதால எங்களால சுத்தப்படுத்த முடியாது. அதால அவங்களிட்ட பாரம் கொடுத்தா நீற்றா செஞ்சு தருவாங்கள்.” என்று பெருமையாக கூறியுள்ளதோடு “ஆக்கள பிடிச்சு செஞ்சா காசு கொடுக்க வேணும். அது தான் இராணுவத்த கொண்டு ப்றியா செய்றம். காசும் மிச்சம் தானே.” என்றும் கூறியுள்ளார்.

கவனியாதோர் கவனத்துக்கு:

வருடாவருடம் நடைபெறும் மடு மாதா தேவாலய திருவிழாவுக்கும் நாடு முழுவதும் இருந்தும் பல இலட்சம் பக்தர்கள் வரத்தான் செய்கிறார்கள். அத்திருவிழாவுக்காக ஒரு வார காலத்துக்கு முன்னரே தேவாலயத்தையும், தேவாலய சூழலையும் தயார்படுத்தும் பணிகளில் தேவாலய திருப்பணி சபையினரும், பங்கு மக்களும் ஈடுபடுகிறார்கள். அங்கு இராணுவ உடை அணிந்த எவரையும் காணவே முடியாது.

அதேபோல யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவுக்கும் பல இலட்சம் பக்தர்கள் வருகை தரத்தான் செய்கிறார்கள். ஒரு வார காலத்துக்கு முன்னரே அதற்கான தயார்படுத்தல்களில் ஆலய பரிபாலனசபையினரும் ஈடுபடுகின்றனர்.

இதன்போதெல்லாம் இவர்கள் எவரும் இராணுவத்தை அழைத்ததில்லை. மாறாக நகரசபை மற்றும் பிரதேசசபைகளின் உதவியையும், அன்பர்களினதும், நலன் விரும்பிகளினதும் உதவியையும் மட்டுமே கோரி தயார்படுத்தல்களில் ஈடுபடுவதுண்டு.

அவ்வாறானால், மேலே குறிப்பிட்டுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையை பிரதிநிதித்துவப்படுத்துபவரின் பேச்சை வைத்து நோக்கும் போது…

ஆலய பரிபாலனசபையின் (நிர்வாக சபை) பலவீனமும் குறைபாடும், அவர்களிலுள்ள பண ஆசையுமே, ஆலய சூழல் முழுக்கவும் இராணுவ மயப்பட்டு கிடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்றே எண்ணத்தோன்றுகின்றது.

நாளையும் (08.06.2014) நாளை மறுநாளும் (09.06.2014) இரு தினங்களில் மட்டும் நாடு முழுவதிலுமிருந்து ஆலய சூழலில் திரளவுள்ள இலட்சோப லட்ச பக்தர்கள் மூலம் கோடிக்கணக்கான நிதி சேரவுள்ள நிலையில்,

ஒன்றரை இலட்சம் நிதியை கிராம மக்களுக்கு கொடுத்து சிரமதானப்பணிகளில் ஈடுபடுத்த ஆலய நிர்வாகம் தயங்குவதும், நிதியை மிச்சப்படுத்துவதற்காக இராணுவத்தை ஆலய சூழலுக்குள் அனுமதித்திருப்பதும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் புனிதத்தை மாசுப்படுத்தும், பெருமையை சீர் குலைக்கும் ஈனச்செயலாகும்.

எமது செய்தித்தளத்தின் சிறப்புச்செய்தியாளர்,
-கவரிமான்-

Tags: ,

Leave a Reply