இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடத்தப்படும், நம்பகரமான உண்மையைக் கண்டறியும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசிடம் கோரியுள்ளார்.
ஜெனிவாவில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 26 ஆவது அமர்வில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவ நீதம்பிள்ளை ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ளார்.
அவரது இந்த உரையின் ஆரம்ப வரைவு நேற்று முன் தினம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த உரையிலேயே அவர் இலங்கையிடம் இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளமை பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது உரையில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்து கடந்த மாதத்துடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தீவிரவாதம் மற்றும் மோதல்களால் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆற வில்லை என்பதை கவனிக்கிறேன்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணைக்கு இணங்கப் பல நிபுணர்கள் மற்றும் சிறப்பு நடைமுறை ஆணை பெற்ற வர்களின் உதவியுடன் மேலதிக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான விரிவான விசாரணைகளை நடத்துவதற்கென, எனது பணியகம் அதிகாரிகள் குழுவொன்றை நியமித்துள்ளது.
ஒரு நம்பகமான உண்மையைக் கண்டறியும் செயல் முறையுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசை ஊக்குவிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
















