ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் சர்வதேச விசாரணைக்குழு ஈழத்தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரச படைகளின் கொடூரங்களுக்குள்ளான அப்பாவித் தமிழர்கள் இந்த விசாரணைக் குழுவுக்கு முன்னால் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளனர் என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26ஆவது கூட்டத்தொடரை நாளை மறுதினம் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஆரம்பித்துவைக்கவுள்ளார். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான தமது அலுவலகத்தின் விசாரணைக்குழுவை நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையிலே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை அரச படைகளின் அராஜகங்களினால் எமது தமிழ் உறவுகளில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் பாதிக்கப்பட்டனர்.
உயிரோடு இருக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகள், தமக்கு நீதி வேண்டி ஐ.நாவின் கதவைத் தட்டினார்கள். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டிருந்தது.
இவ்வாறான நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் சர்வதேச விசாரணைக்குழுவின் விவரம் எதிர்வரும் செவ்வாயன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துள்ளோம். எனவே, இந்த சர்வதேச விசாரணைக்குழு ஈழத்தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது.
இலங்கை அரச படைகளின் கொடூரங்களுக்குள்ளான அப்பாவித் தமிழர்கள் இந்த விசாரணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளனர் என்றார்.
















