விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் மலேசியாவுக்கு வரும் புலிகளின் உறுப்பினர்களை மலேசிய அக்கா என்ற பெண் நெறிப்படுத்தி வருவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மலேசிய அக்கா என்று அழைக்கப்படும் தலவீரலன் பூங்குழலி என்ற புலிகளின் தலைவி உட்பட சந்தேக நபர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக சிகப்பு அறிக்கை பிடிவிராந்தை பிறப்பிக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தீர்மானத்துள்ளனர்.
மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மலேசியாவில் இருந்து ரகசியமான முறையில் ஒருங்கிணைந்து வரும் புலிகளின் செயற்பாடுகள் பற்றிய முக்கியமான தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தேடி வரும் மலேசிய அக்கா என்பவர் மலேசிய தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் என தெரியவருகிறது.
இந்த பெண், தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் மலேசியாவில் இருந்து தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் ஆலோசனையின்படி மலேசியாவில் இருக்கும் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் ரகசியமான தொடர்புகளை கொண்டிருக்கும் மலேசிய அக்கா, இலங்கையில் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் உயிரிழந்த பின்னர் கூட இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
கோபி உட்பட கொல்லப்பட்ட மூன்று பேர் காடுகளுக்குள் பதுங்கியிருக்க உதவிகளை வழங்கியதாக கூறப்படும் இரண்டு பேர் அண்மையில் கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிங்கள ஊடகமான மௌபிம செய்தி வெளியிட்டுள்ளது.
















