சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் முகம் கொடுக்காவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஐ.தே.க

Lakhsman_Kiriella_UNPசர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் முகம் கொடுக்காவிட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கும் நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சி அரசாங்கம் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் அக்கட்சி வலியுறுத்தியது.

இது தொடர்பாக ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை அரசாங்கம் நிராகரிப்பது ராஜ தந்திர ரீதியான புத்துசாரியமான விடயமல்ல.

அவ் விசாரணையை ஏற்றுக் கொண்டு சாட்சியங்களை வழங்க வேண்டும்.இது அரசாங்கத்திற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும்.
சர்வதேச ரீதியாக எமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்த மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சாட்சியங்களுடன் காரணங்களை எடுத்து கூறிய படையினர் மீதான அவப் பெயரை நீக்க முடியும்.

எமது பக்க நியாயத்தை எடுத்துக் கூறி படையினரதும் நாட்டினதும் கௌரவத்தை பாதுகாக்க முடியும்.

இதனை நிராகரிப்பது ராஜதந்திர மரபுகளை மீறும் புத்திசாலித்தனமற்றதாகும்.

இல்லாவிட்டால் சர்வதேச விசாரணையார்களை தன்னிசையாக விசாரணைகளை நடத்தி எமது நாட்டுக்கு எதிராக தீர்மானங்களை எடுப்பார்கள்.

இது பாதகமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளால் மேற் கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்பட வேண்டுமென ஐநா விசாரணை குழு தெரிவித்துள்ளது.

எனவே இவ் விசாரணைகளில் அரசாங்கம் கலந்து கொள்வதன் மூலம் புலிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த அட்டூழியங்களையும் அழிவுகளையும் தெளிவுப்படுத்தவும் வழியமைக்கும்.

இதனை அரசாங்கம் மேற் கொள்ளாவிட்டால் சர்வதேசம் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்கும்.

இதனால் சர்வதேசத்தின் கடுமையான பொறிக்குள் சிக்குவதா இல்லையா என்பதனையும் நாட்டினதும் படையினரதும் கௌரவத்தை பாதுகாப்பதா இல்லையா என்பதனையும் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்தவுடன் ஐநா ஆணையாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்கு வந்தார் .

இதன் போது யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மகிந்த ராஜ பக்ஷவுக்கு பாங் கி மூன் விடுத்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இவ்வாறானதொரு உள்ளக விசாரணை நடை பெறாத காரணமாகவே சர்வதேச விசாரணைக்கு கதவுகளை திறந்து விட்டது என்றும் லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply