இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பிலான ஐ.நா. விசாரணைக் குழுவின் புதிய நியமனங்கள் குறித்த இலங்கை அரசின் பதில் இன்று ஆரம்பமாகவுள்ள மனித உரிமை ஆணைக் குழுவின் கூட்டத்தொடருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி ஏழு ஆண்டுகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான குழு பற்றிய விவரங்களை கடந்த வாரம் இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தி விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
விசாரணைக்காக உருவாக்கப்படும் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும், குழுவின் தலைவர் மற்றும் மூத்த ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் சன்ரா பேய்டஸின் பங்களிப்பு பற்றி தெளிவுபடுத்தியும் கடந்த வாரம் இலங்கைக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டதாக மனித உரிமை ஆணையாளரின் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட விசாரணைக்குழு தொடர்பான ஏனைய கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜூலை மாதத்திற்கு முன்னர் இக்குழுவினர் செயற்பட ஆரம்பிப்பர் எனவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளின் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட உள்ள இரு சர்வதேச பிரபலம் வாய்ந்த நிபுணர்கள் யார் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் முடிவாகவில்யென்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும், கம்போடிய யுத்தக்குற்ற நீதிமன்ற நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் இவர்களில் ஒருவர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இவர்களுடன் இணைந்து சட்டவிரோத படுகொலைகள், சித்திர வதைகள் மற்றும் காணாமல் போகச்செய்தல் ஆகியவற்றுக்கான விசேட அறிக்கையாளார்களும் செயற்படுவர்.
இதேவேளை, இந்தக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக தமக்கு அறிவிக்கவில்லை என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்துளளார்.
இதேவேளை, விசாரணைக்குழுவின் புதிய நியமனங்கள் குறித்த இலங்கை அரசின் பதில் இன்று ஆரம்பமாகவுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
தென்சூடானின் இராணுவத்தினர் 2012இல் இழைத்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைக்காக அந்த நாடு சன்ரா பெய்டஸை வெளியேற்றியுள்ளதைத் தொடர்ந்து இலங்கையும் அவரது நியமனத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளது எனவும் தெரியவருகிறது.
















