ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசமைப்புக்கான 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாக, அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்குறுதிகளை கால தாமதமின்றி அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமானது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் தொடர்பில் எவருக்கும் நம்பிக்கை இல்லை. தீர்வு எதனையும் எட்டாது வெறுமனே பேச்சு நடத்துவதில் எவ்வித பயனும் கிடையாது. அரசமைப்புக்கான 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித தடைகளும் இல்லை. 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தைப் பகிர அரசுக்கு விருப்பம் இல்லாவிட்டால், வேறு மாற்று அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை அரசு முன்வைக்க வேண்டியது அவசியமானது. எனினும் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தாது தம்மை விமர்சனம் செய்யும் தரப்பினரை துரோகிகளாக அடையாளப்படுத்துவதில் ஜனாதிபதியும் சில அமைச்சர்களும் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளில் பங்கேற்று நேரத்தை விரயப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது என்பது குறித்து அரசு எழுத்து மூலமான யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். அவ்வாறு எழுத்து மூலமான யோசனைத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எம்மால் பதிலளிக்க முடியும் என்றார்.
















