கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து இனவாத ஆட்சி நடத்திவரும் மாகாணசபையின் நடவடிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார். சம்மாந்துறை தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழ்மக்கள் அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி இன்று இராஜதந்திரப் போரை நடத்தி வருகிறார்கள். இந்தப் போருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுவடிவம் கொடுத்துள்ளது. இந்த இராஜதந்திரப் போரால் இன்று மாகாணசபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது பொலிஸ் அதிகாரம் வழங்க அரசு முன்வந்திருக்கிறது.
இதற்கு அடிப்படைக் காரணம் கூட்டமைப்பின் இராஜதந்திர காய் நகர்த்தலே. தமிழ் மக்களின் காணி உள்ளிட்ட உரிமைப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரே தகுதி எமது கட்சிக்கே உண்டு. அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ்க் குழுக்களாலோ ஒட்டுண்ணிகளாலோ தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. கிழக்கு மாகாணசபை தமிழ் மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் திட்டமிட்டு புறக்கணித்து இனரீதியாகச் செயற்படுகிறது. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள 10 கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கிராமம் கூட தெரிவு செய்யப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன விகிதாசாரம் பேணப்படவில்லை. கிழக்கு மாகாணசபை என்பது மூவினங்களுக்கும் சொந்தமானது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டையும் உள்ளடக்கியதே. இதனை முதலமைச்சரும் ஏனையோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
















