லண்டன் மாநாட்டில், இலங்கை பாலியல் வன்முறைகள் குறித்த விவாதம் இடம்பெறாதது ஏன்?- பிரி. ஊடகங்கள் கேள்வி.

un_26_03_2014_5பிரித்தானியா, லண்டனில் செவ்வாயக்கிழமை ஆரம்பமான மோதல்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது குறித்த அனைத்துலக மாநாட்டில், இலங்கை குறித்த விவாதத்துக்கு இடமளிக்கப்படாதது ஏன் என பிரித்தானிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்ர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஏஞ்சலினா ஜொலி ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் 140 வரையான நாடுகள் பங்கேற்கின்ற போதும், இலங்கை இதனைப் புறக்கணித்துள்ளது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சிரியா, கொங்கோ உள்ளிட்ட நாடுகளில் பாலியல் வன்முறைகள் தொடர்பான விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதும், இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

இலங்கையில் போரின் போது, பாலியல் வன்முறைகள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ள போதும், அதற்கான ஆதாரங்கள் பல கிடைத்துள்ள போதும், இந்த மாநாட்டில், இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று பிரித்தானிய ஊடகங்கள் விசனம் வெளியிட்டுள்ளன.

பாலியல் ரீதியாக வன்முறைக்குட்படுத்தப்பட்ட பலர் பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையிலும், போரின் போது இசைப்பிரியா பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியான போதிலும், இன்னும் இத்தகைய குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் உள்ள போதிலும் இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் கவனிக்கப்படாமல் போயுள்ளது குறித்து இந்த ஊடகங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. இலங்கையில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலக மாநாடு ஏன் மறந்து போனது என்றும் இந்த ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

Tags: , ,

Leave a Reply