சாவ் பாலோ: 32 நாடுகளின் தேசிய அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் இன்று தொடங்குகிறது. அதற்கான தொடக்க விழா சாவ் பாவ்லோ நகரில் நள்ளிரவில் நடைபெறுகிறது.
வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன், பிரமாண்ட தொடக்க விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 600 கலைஞர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரேசிலின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. அமெரிக்க பாப் பாடகி ஜெனிபர் லோபஸ், உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலைப் பாட உள்ளார்.
அவருடன், அமெரிக்க கலைஞர் பிட்புல், பிரேசில் பாடகி கிளாடியா லெய்டி ஆகியோரும் அசத்தக் காத்துள்ளனர்.
ஃபிஃபா தலைவர் பிளாட்டர், பிரேசில் அதிபர் தில்மா ரவூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பங்கேற்க உள்ளனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று முதல் ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் என்ற 2வது சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் பிரேசிலும், குரோஷியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3400 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.207 கோடியும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.148 கோடியும் கிடைக்கும்.
பிரேசில் நாட்டின் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி முதல் பார்க்க முடியும். சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
















