கலைஞரின் அரிசியும், அம்மாவின் உப்பும்!

amm-saltமலிவு விலையில் தரமான அம்மா உப்பு பாக்கெட் விற்பனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று புதன்கிழமை (ஜூன் 11) தொடங்கி வைத்தார்.

மூன்று வகைகளில் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உப்பு பாக்கெட்டுகள் அமுதம் உள்ளிட்ட கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படவுள்ளன.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றும் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மலிவு விலையில் அம்மா உப்பு வழங்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மூன்று வகையான உப்புகளை தலைமைச்செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அறிமுகம் செய்து வைத்து அவற்றின் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

இரும்பு மற்றும் அயோடின் சத்து நிறைந்த உப்பு (ஒரு கிலோ ரூ.14), சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு (ரூ.10), குறைந்த அளவு சோடியம் கலந்த உப்பு (ரூ.21) ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.

எங்கு கிடைக்கும்?

மலிவு விலை உப்பு பாக்கெட்டுகளை தமிழக அரசுக்குச்சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பு தொழிற்சாலையில் இந்த மலிவு விலை உப்பு தயாராகிறது. முதல் கட்டமாக 100 டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த உப்பு பாக்கெட்டுகள் அமுதம், சிந்தாமணி, கூட்டுறவு அங்காடிகள், கூட்டுறவுத்துறை கடைகளில் விற்பனைக்குக்கிடைக்கும்.

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது.

குறிப்பாக அடித்தட்டு மக்கள் பசி பட்டினி இன்றி இருப்பதற்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதுபோல பஸ் நிலையங்களில் அம்மா குடிநீரும் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 1 லிட்டர் குடிநீர் ரூ.10க்கு கிடைப்பதால் தொலை தூரங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு அது பயன் உள்ளதாக இருக்கிறது.
இந்த நிலையிலேயே தமிழக அரசு மலிவு விலையில் உப்பு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கே அம்மா உப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது, ஒரு ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தமை தெரிந்ததே.

Tags: , , ,

Leave a Reply