தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய, செட்டிக்குள பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட 6,348 ஏக்கர் காணியை, நெடுங்கேணியில் உள்ள இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்றிற்கு பழ மரச்செய்கைக்காக கையளிக்குமாறு காணி – காணி அமைச்சின் மேலதிக செயலாளர் அரச அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
செட்டிக்குளம் பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் காணி அற்றவர்களாக உள்ள நிலையில், நெடுங்கேணியிலுள்ள படைப்பிரிவுக்கு கையளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ள காணி, இறுதிகட்டப்போரினால் இடம்பெயரச்செய்யப்பட்டு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தடுத்து வைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்கள் அமைக்கப்பட்ட இடமாகும்
அந்த இடத்தையும், அதற்குச்சூழவுள்ள மேலதிகமான இடத்தையும் இராணுவம் சுவீகரித்து வைத்துள்ளது. ஏறத்தாழ பத்தாயிரம் ஏக்கர் காணிகளுக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவற்றில் ஒருபகுதியே குறித்த 6,348 ஏக்கர் காணியாகும். வவுனியா மாவட்டத்திலேயே செட்டிக்குளம் பிரதேசத்தில் தான் இவ்வாறு பெருந்தொகை காணிகள் அபகரிக்கப்பட்ட மோசமான செயல்பாடு இடம்பெற்றுள்ளது.
















