மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால் எதற்காக சர்வதேச சுயாதீன விசாரணைகளை அரசாங்கம் எதிர்க்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இந்த தீர்மானத்தில் சில திருத்தங்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். எனவே சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின் போது எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணைகளை நடாத்த வேண்டாம் எனக் கோர வேண்டிய அவசியம் என்ன என ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சாவதேச விசாரணைகளை நடத்தக் கூடாது என வலியுறுத்துவதன் மூலம், அரசாங்கம் எதனையோ மறைக்க முயற்சிக்கின்றது என்ற கருதுகோளை சர்வதேச சமூகம் ஏற்படுத்திக்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் இறைமை, படைவீரர்கள், பௌதிக ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதே எமது கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ரீதியில் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்த அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















