ஐநாவின் விசாரனைக் குழுவை அனுமதிப்பது குறித்த அழுத்தங்களை பிரயோகிக்க, அமெரிக்காவில் இருந்தும் ஐக்கியநாடுகள் சபையின் உயர் மட்டத்தில் இருந்தும் உயரதிகாரிகள் இருவர் விரைவில் இலங்கைக்கான திடீர் பயணத்தை மேற்கொண்டு கொழும்பில் தரையிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைக்குழு இலங்கைக்கு சென்று தனது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான பயனமாக இவர்களின் திடீர் விஜயம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும்படி இலங்கை அரசாங்கத் தலைமையை வற்புறுத்துவதே இந்த இருவரினதும் பயனங்களின் பிரதான நோக்கம் என தகவல் வெளியாகி உள்ளன.
தனித்தனியான பயணங்களை மேற்கொண்டு அடுத்த வார முற்பகுதியில் கொழும்பு செல்லும் இருவரில் ஒருவர் ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான 57 வயதுடைய ஒஸ்கார் பெர்னாண்டஸ் டிரான்கோ (OSCAR FERNANDEZ TARANCO) என தெரிவிக்கப்படுகிறது. இவர் ஐ.நா. செயலாளர் நாயகம் போன்கிமுனின் விசேட பிரதிநிதியாக செல்கிறார்.
மற்றயவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அதுல் கேசாப் (ATUL KESHAP) என்பவர் என அறியப்பட்டுள்ளது. இவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் சார்பில் செல்ல உள்ள உயர் நிலை இராஜதந்திரியாகும்.
இவர்கள் இருவரும் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் எதிர்க் கட்சிகளின் முக்கிய தலைவர்களையும் குறிப்பாக பிரதான தமிழ் முஸ்லீம் கட்சிகளின் முக்கியஸ்த்தர்களையும் சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வகையில் எதிர் வரும் நாட்கள் இலங்கைக்கு மிகவும் சோதனை மிகுந்த நாட்களாக அமைய உள்ளதாக தெரிவிக்கும் உள்ளக மற்றும் சர்வதேச ராஜ தந்திரிகள் அயல் நாடான இந்தியாவின் மறைமுக அழுத்தங்களும் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
















