இந்தியாவில் முன்னர் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை விதித்தமை சரியானதா என்பதை ஆராய்வதற்கு தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளரினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டில்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு முன்னைய மத்திய அரசான காங்கிரஸ் தெரிவித்த காரணம் சரியானதுதானா என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. அதன்மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு தொடர்புடைய அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது.
மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு பதவியிழப்பதற்கு இரு தினங்களுக்க முன்னர் அதாவது கடந்த மே 14 ஆம் திகதியிட்ட மத்திய அரசின் அரசிதழில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்படுகின்றது என்றும் அதனை நியாயப்படுத்தி சில காரணங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையை மையமாக கொண்டு செயற்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகும், தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தி அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்டுகிறார்கள்.
அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், 2012 மே 14 ஆம் திகதி முதல் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும், தனி ஈழக் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளின் வாழும் இலங்கை தமிழர்கள் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த இந்திய மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள், இதுபோன்ற பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்த இயக்கத்தினராலும், அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு நேரும் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிவாத அமைப்பு என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலமையிலான அரசு வெளியிடப்பட்டிருந்த அரசிதழில் காரணங்கள் கூறப்பட்டிருந்தன.
















