இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்த விவேக், முதல்முறையாக தனது ரசிகர்களை அழ வைத்திருக்கிறார். தன்னால் எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட நடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் சின்னக்கலைவாணர் விவேக்.
வயதான தாய்,தந்தையருடன் கும்பகோணத்தில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் பூசாரி வேலை பார்த்து வருகிறார் விவேக். ஒருநாள் விவேக்கின் அப்பா, கோவில் நகைகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார். இதனால் மனம் வேதனையடைந்த விவேக்கிற்கு பூச்சி என்னும் கொலைகாரன் உதவி செய்கிறான். பூச்சியின் உதவியால் தந்தையை ஜாமீனில் எடுக்கிறார் விவேக். ஆனால் ஜெயிலுக்கு சென்று வந்த அவமானம் தாங்காமல், விவேக்கின் அப்பா, தனது மனைவியுடன் கும்பகோணம் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் வாழ்க்கையையே வெறுத்து வாழ்ந்து வரும் விவேக்கை பூச்சி காஞ்சிபுரத்திற்கு அழைது செல்கிறார்.
கும்பகோணத்தில் உள்ள ஒரு பெரிய தொழிலதிபரை கொலை செய்ய வந்த பூச்சிக்கும், விவேக்கிற்கும் நெருக்கமான நட்பு உண்டாகிறது. காஞ்சிபுரம் செல்லும் விவேக் அங்கு ஸ்வேதா என்ற பெண்ணை பார்த்து காதல் கொள்கிறார். இந்நிலையில் பூச்சியால் கொலை செய்யப்பட்ட கும்பகோணம் தொழிலதிபரின் அண்ணன் பூச்சியை பழிவாங்க காஞ்சிபுரம் வருகிறார். பூச்சியை போலீஸிடம் சிக்க வைத்த அண்ணன், பூச்சியின் தலைவனையும் பிடிக்க முயற்சிக்கிறான். அதற்கு விவேக்கின் உதவியையும் நாடுகிறான். விவேக் தென்னவனை பிடிக்க உதவி செய்தாரா? பூச்சியுடன் இருந்த நட்பு என்ன ஆனது? ஸ்வேதாவை கைப்பிடித்தாரா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விவேக்கின் நடிப்பு படம் முழுவதும் அருமை என்று சொல்ல வைக்கிறது. மூட நம்பிக்கைகள் குறித்து இதுவரை கேலியாகவும் கிண்டலாகவும் கூறிவந்த விவேக், இந்த படத்தில் அதே கருத்துக்களை சீரியஸாக மனதில் பதியும்படி சொல்லியிருப்பது சிறப்பு. நாயகி ஸ்வேதாவிற்கு அதிகம் வேலையில்லை. இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு.
பூச்சியாக வரும் புதுமுகம் வேங்கடராஜின் நடிப்பு மிக அருமை. தென்னவன், மயில்சாமி, செல்முருகன் ஆகியோர்களும் படத்தில் நடித்துள்ளனர்.
‘பாலாவிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் கண்ணன், நல்ல அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்து அதை சற்றும் போரடிக்காமல் நகர்த்தியிருப்பது திருப்தி அளிக்கிறது. முதல் படமே குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான தரமான படத்தை இயக்குனரும் தயாரிப்பாளரும் சேர்ந்து கொடுத்திருப்பது அவர்களுடைய பாசிட்டிவ் எண்ணங்களை காட்டுகிறது. நான்தான் பாலா, மொத்தத்தில் பாராட்டக்கூடிய படம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
















