ஜப்பானை சேர்ந்த புதுமாப்பிள்ளை ஒருவர், விமானத்தில் தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் பயங்கர போதையில் விமான நிறுவன ஊழியர்களுடன் தகராறு செய்ததால், சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அவருடைய ஹனிமூன் கேன்சல் ஆகிவிட்டது.
ஜப்பானை சேர்ந்த 30 வயது Kenji Okamoto என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி திருமணம் நடந்தது. அவர் தன் புது மனைவியுடன் ஹவாய் தீவுக்கு ஹனிமூன் செல்வதற்காக ஜப்பானின் ஒசாகாவில் இருந்து விமானத்தில் கிளம்பினார்.
விமானம் ஏறுவதற்கு முன்பே சரியான போதையில் இருந்த அவர், விமானத்தில் ஏறியவுடன் நான்கு பாட்டில் பீர், மற்றும் ஒயின் குடித்துள்ளார். போதை தலைக்கேறியதால் சாப்பாடு கொண்டு வந்த விமான ஊழியர் ஒருவரிடம் தகராறு செய்ததோடு சாப்பாட்டு தட்டையும் அவர் மீது வீசி அந்த ஊழியரை பயங்கரமாக தாக்கினார். இதனால் விமானத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் விமான ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் Kenji Okamoto கைது செய்யப்பட்டார். அவருடைய புதுமனைவி அவரை மன்னித்து, விட்டுவிடும்படி காவல்துறையினர்களை கேட்டுக்கொண்டபோதிலும், அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவர் செய்த குற்றத்திற்கு குறைந்தது 20 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுவதால், தன்னுடைய ஹனிமூன் கேன்சல் ஆனதோடு, தன் வாழ்க்கையும் சீரழிந்துவிட்டதாக அவருடைய மனைவி கதறியழுதார்.
















