மன்னார் பெரிய கடை,உப்பள வீதி ஆகிய பகுதிகளில் நேற்று (14) சனிக்கிழமை முதல் படையினர் வீடு வீடாகச் சென்று குடும்ப விபரங்களை திரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் படைக்குழுவினர் வீட்டில் உள்ளவர்களின் விபரங்களை பதிவு செய்த பின் வீட்டில் உள்ள ஒருவரிடம் கையொப்பத்தை பெற்றுக்கொள்ளுகின்றனர்.
காவல்துறையினரோ அல்லது கிராம அலுவலகரோ இல்லாத நிலையில் படையினர் தன்னிச்சையாக இவ் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளுக்குச் செல்லும் படையினர் குடும்ப உறுப்பினர்களின் முழு விபரங்களையும் பதிவு செய்து கொள்வதோடு வேறு யாரும் வருகின்றார்களா, போகின்றார்களா என்ற கேள்விகளையும் கேட்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் படையினரின் தன்னிச்சையாக இச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் மக்கள் தெரிவித்துள்ளனர்.
















