துள்ளிக் குதித்து விளையாடும் போது எலும்பு பலம் பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடல் அசைவே எலும்புத் தொகுதியைத் திடகாத்திரமாக வைத்திருப்பதாக ஆய்வியல் கண்டு கொண்டுள்ளது. மிகவும் பலமான எலும்புத் தொகுதி கொண்ட மனிதர்களின் எலும்பும், நாற்பது வயதுக்குப் பின் சீரழிய ஆரம்பிப்பது தெரியவந்துள்ளது. அதில் ஏற்படக்கூடிய சிறிய வேலைப்பளுவும் எலும்பு முறிவிற்குக் காரணமாகிவிடுகிறது. நாற்பது வயதிற்குப் பின்னான காலப்பகுதிகளில் எலும்பின் அளவும், நிறையும் குறைய ஆரம்பிப்பதோடு. அதனிலுள்ள நுண்துளைகள் அதிகப்படியாகும் தன்மையும் இடம் பெறுகிறது. இந்த வியாதியை ஆங்கிலத்தில் ஒஸ்ரியோப்றோசிஸ் (Osteoporosis) என அழைப்பர். எலும்பினது திடகாத்திரத் தன்மை குறையும் போது உடலின் அமைப்பு சீரற்ற நிலை அடைவதும், சிறிய பளுவும் எலும்பில் வெடிப்புக்களைக் கொணரும் சாத்தியம் காணப்படுவதும் அறிய வந்துள்ளது.
கல்சியம் குறைந்த உணவுப் பழக்கம், குடிப்பழக்கம் அதிகளவில் கொழுப்புக் கூடிய இறைச்சி உண்ணும் வழக்கம் போன்றவையோடு விட்டமின் D இனது குறை பாடும், எலும்பு வியாதிக்குக் காரணமாகிறது. விட்டமின் D ஆனது கல்சிய ஊட்டச்சத்தை உடல் பெற்றுக்கொள்ள உதவுகின்றது. விட்டமின் Dயை மீன் வகை, அவக்காடோப் பழம் போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். சூரிய ஒளியில் உலாவுவதன் மூலம் உடலை விட்டமின் D தயாரிப்பில் ஈடுபடுத்தவும் இயலும். கல்சிய ஊட்டச்சத்தைப் பால், பாலுணவு வகை, பச்சை இலை வகைகளான கீரை, புறக்கொலி போன்றவற்றிலிருந்து பெறமுடியும். இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் மத்தியிலும், நாற்பது வயதிற்குப் பின்னான எலும்பினது சீரழிவு முழுமையாகத் தடுக்கப்பட நவீன உலகில் புதிய வழி கண்டு கொள்ளப்பட்டுள்ளது.
எலும்பு வியாதிகளிலிருந்து மீள்வதற்கு, உடல் அசைவு மிகவும் முக்கியமானதொன்றென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்பில் ஏற்படும் தாக்கத்தை உணரும் எழும்பின் கலமான ஒஸ்ரியோசிற் (Osteocyte), உடலில் ஏற்படுத்தப்படும் பளுவை உணர்ந்து, எலும்பு சிதைவதற்கும் அது மீண்டும் உருப்பெற்று பலம் பெறுவதற்கும் இடையிலான நடு நிலையைப் பேணுவதாக கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பளு அற்ற நிலை காணப்படும் போது எலும்பை சிதைக்கும் கலமான ஒஸ்ரியோகிலாஸ்ற் (Osteoclast) மஜ்ஜையில் உருவாகுவதும், பளு அதிகரிக்கும் போது எலும்பை உருவாக்கும் உயிரணுவான ஒஸ்ரியோபிளாஸ்ட்(Osteeblast) அதிகரிப்பதும் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. மிக வேகமாகத் துள்ளும் பயிற்சி எலும்பை வலுப்படுத்த உதவுகிறது. பளு தூக்கி உடற்பயிற்சி செய்து கொள்பவர்களை விட, துள்ளிப் பாய்ந்து வொலிபோல்(Vollyball) விளையாடுபவர்கள் மத்தியில் எலும்பு திடகாத்திரமாக அமைந்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
புவியீர்ப்பை விட, நாளிலிருந்து ஏழுமடங்கு அதிகமான சீர்ப்பிரமாணத்தினுள் (Rhythm) அமைந்த துள்ளல் அடங்கிய பயிற்சி எலும்பின் வலுவை உறுதி செய்கிறது. இதற்குத் துள்ளும் தளமான ற(tr)ம்பொலின் (Trampoline) உபயோகிக்கப்படுகிறது.
கயிற்றைச் சுழற்றித் தாண்டி ஆடுவதும் (Skipping), துள்ளிக் குதித்து விளையாடுவதும் கூட எலும்பிற்கு ஆரோக்கியம் என்கிறது மதி.! இச் செய்கையின் விளைவாக எலும்பு பலம் பெறும் என்பது விதி! இதை விடுத்து விதியெழுதப்பட்டு உயிரினம் பூமியில் உழல்கிறது எனும் போதம் வெறும் அறிவீனச் சதி! சுழலும் உலகில் உண்மை விதியை அறிந்து, நவீன ஆய்வுகளின் சுரிதியைப் புரிந்து, மதியோடு வாழ்ந்து, பூவுலகில் இன்பத்தில் குதிப்பதே உயிரினத்தின் கதி!!!
-மகேந்தி
















