UN விசாரணை குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

un-flagஆளும்தரப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறுபான்மைக் கட்சிகள் மகிந்தவை குஷப்படுத்துவதில் ஆர்வம்-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பில் பாராளுமன்றில் நடத்தப்பட உள்ள வாக்கெடுப்பினை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

எதிர்வரும் 17 மற்றும் 18ம் திகதிகளில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டு;ள்ள தீர்மானம் குறித்த விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரினால் கடந்த 13ம் திகதி இந்த யோசனைத் திட்டம், சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழு இலங்கையின் இறைமையை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், விசாரணைக் குழுவினர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப் போவதில்லை எனவும் உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த தீர்மானத்தை அரசாங்கம் ஏற்கனவே ராஜதந்திர ரீதியில் நிராகரித்துள்ள நிலையில், பாராளுமன்றில் அது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசாங்கம் நிராகரித்த ஒன்று தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் கருத்து கோருவதில் பயன் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் அரசியல் சுயலாபத்தை அடிப்படையாகக் கொண்டது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

எனவே இந்த தீர்மானம் குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என கட்சி அறிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் தீர்மானம் குறித்த நிலைப்பாட்டை இதுவரையில் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.

Tags: ,

Leave a Reply