தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கொலை செய்யபோவதாக குறுஞ்செய்தி அனுப்பியவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் ஆர்.டி.ஓ.வாக இருந்துவரும் லீலாவதிக்கு, கடந்த 13ம் திகதி வந்த குறுஞ்செய்தியில் மாவட்ட ஆட்சியரை இன்னும் 5 நாட்களுக்குள் கொலை செய்துவிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் தாசில்தாராக உள்ள கண்ணனுக்கு வந்த குறுஞ்செய்தியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோரை இன்னும் 3 நாட்களில் கொலை செய்யப் போகிறோம் என்று குறிப்பிட்டு, இப்படிக்கு கார்த்திக் என்று பெயருடன் வந்துள்ளது.
மேலும், அந்த கார்த்திக் என்ற பெயருக்கு அருகில் கைப்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த எண்ணின் உரிமையாளரான கார்த்திக் சேலம் அருகே உள்ள இரும்பாலையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
ஆனால், அவரிடம் விசாரித்தபோது அவர் இதற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்ததால்அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த கொலை மிரட்டலை அடுத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















