ஐ.நா.வை அனுமதிப்பதா இல்லையா : இன்றும் நாளையும் விவாதம்

un-lkஐ.நா. மனித உரிமை விசாரணை குழுவை விசாரணை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கோரி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது.

குறித்த விவாதத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்றும் (17) நாளையும் பாராளுமன்றத்திற்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் எனவும் ஆளும் தரப்பு எம்.பிக்களின் வெளிநாட்டு பயணங்களையும் ரத்துச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அலுவலகம் தெரிவித்தது.

போர் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைமீறல்கள் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த மனித உரிமை குழுவொன்றை ஐ.நா.மனித உரிமை பேரவை நியமித்தது.

இக்குழு இங்கு வந்து விசாரணைகளை செய்ய அனுமதி வழங்குமாறு மனித உரிமை பேரவை அரசாங்கத்தை கோரியிருந்தது. ஆனால் இது தொடர்பில் பாராளுமன்றத்திலுள்ள எம்.பி.களின் அபிப்பிராயத்தை அறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆளும் தரப்பு எம்.பி. கள் 9 பேரின் கையொப்பத்துடன் கடந்த புதனன்று சபாநாயகரிடம் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.இது குறித்து கடந்த 13ஆம் திகதி நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு இது தொடர்பில் 17, 18 ஆம் திகதிகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெற்ற பின்னர் நாளை மாலை பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply