அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பது குறித்து தான் வெட்கப்படுவதாகவும், தனது மக்களை தன்னால் பாதுகாக்க முடியாது போயுள்ளதாகவும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து உடனடியான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆபத்தான நிலையில் இருக்கும் மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தர்கா நகரிற்கு சென்றுள்ள அமைச்சர் ஹக்கீம்
நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் இன்று காலை அலுத்கம பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார்.அங்கு கருத்து பொதுமக்களுடன் உரையாடிய அவர் தர்கா நகரிலுள்ள எனது மக்களை பாதுகாக்க முடியாததையிட்டு வெட்கப்படுகின்றேன் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தற்போது தர்கா நகரிற்கு சென்றுள்ள அமைச்சர் ஹக்கீம் அங்குள்ள ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தர்கா நகரில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தினால் மூவர் கொல்லப்பட்டதுடன் பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தீவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஹக்கீம் இராஜினாமா செய்ய போகிறார்?
பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தெரியவருகிறது. பொலிவியாவில் நடைபெறும் ஜீ.77 நாடுகளில் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம் இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேற்படி பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள அமைச்சர், தொடர்ந்தும் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் ஹக்கீம் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
















