வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்று ஆறு மாதங்களின் பின்னர் இதன் முதலாவது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த போது, தனது இரு கைகளும் கட்டப்பட்டுள்ளதால் தன்னால் அதிகளவில் எதனையும் செய்ய முடியவில்லை எனக் கூறினார். தயக்கத்துடன் சிறிலங்காவின் அரசியலில் நுழைந்து கொண்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மக்களின் அமோக ஆதரவு வாக்குகளைப் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார். சிறிலங்காவின் உச்ச நீதிமன்றின் முன்னால் நீதிபதியான சி.வி.விக்னேஸ்வரனுக்கு இப்புதிய அரசியல் பிரவேசம் நியாயமான ஒரு பணியாகக் காணப்படுகிறது.
வடக்கு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு அடிப்படை நிர்வாகத்தைக் கூட நடாத்த முடியவில்லை எனவும் இதனால் இப்பிராந்தியத்தில் வாழும் மக்கள் தொடர்ந்தும் போரின் வடுக்களைத் தாங்கி வாழவேண்டிய நிலை காணப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சர் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அதிருப்தியை வெளியிடுவதுடன் இது தொடர்பில் கொழும்பு தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்த்தது. எதுஎவ்வாறிருப்பினும், இராணுவத்தின் தலையீடானது வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் காணப்படுவதானது கவலைக்குரிய விடயம் எனவும் ‘த இந்து’ ஊடகத்தின் ஊடகவியலாளர் மீரா சிறினிவாசனுடனான நேர்காணலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
கேள்வி: வடக்கு மாகாண சபை தெரிவுசெய்யப்பட்டு ஏழு மாதங்களின் பின்னர் தங்களைச் சந்திக்கின்ற நிலையில், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் உங்களது கருத்துக்கள் என்ன?
பதில்: வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மக்கள் தமது ஆணையை வழங்கிய பின்னர் நாங்கள் எதிர்பார்த்தது போன்று வடக்கு மாகாண நிர்வாகத்திடம் சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது அதிகாரங்களை இன்னமும் வழங்கவில்லை. இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தில் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்பது மிக முக்கிய விடயமாகும். இராணுவ மயமாக்கல் என்பது மக்களின் இயல்பு வாழ்வைச் சீர்குலைப்பதுடன், குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், வேறுபட்ட கலாசாரத்தைப் புகுத்துகின்றது. இதுமட்டுமல்லாது, வடக்கு மாகாணமானது இராணுவ மயப்படுத்தப்படுவதால் இங்கு பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. இதனால் மக்களின் அவாக்கள் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறான ஒரு சூழலில், புதிய மாகாண சபையை நடாத்திச் செல்வதென்பது மிகவும் கடினமான பணியாகும். குறிப்பாக போர் இடம்பெற்ற பிரதேசத்தில், கல்வித் துறை பாதிப்படைந்த பிரதேசத்தில் புதிய மாகாண சபை நிர்வாகத்தை நடாத்திச் செல்வதென்பது மிகக் கடினமான பணியாகும். வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை முடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இதனை நடாத்திச் செல்லுதல் என்பது ஒரு சாத்தியமற்ற ஒன்றாகவே நோக்கப்படுகிறது. வடக்கு மாகாண பிரதம செயலாளரின் நியமனத்தை எடுத்துக் கொண்டால், இவரது நியமனம் மாகாண ஆளுநராலேயே வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சட்டத்தை மீறுகின்ற செயலாகும். வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஆவார்.
இந்நிலையில் ஜனநாயக ஆட்சியை வினைத்திறன் மிக்க வகையில், பயனுள்ள வகையில் நடாத்திச் செல்ல முடியும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அதாவது வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திற்குச் சமாந்தரமாக இராணுவ ஆட்சி நிலவுகின்ற இச்சூழலில் எவ்வாறு ஜனநாயக ஆட்சியை நடாத்த முடியும்? இந்த நிலையை மேலும் மோசமாக்குவதற்காக தற்போது, புலிகள் மீளவும் ஒன்றுசேர்வதான மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வடக்கில் இராணுவமயமாக்கல் இன்னமும் தேவையாக உள்ளது என்பதை நியாயப்படுத்த முடியும். எதுஎவ்வாறிருப்பினும், இது ஒன்றும் எதிர்பார்க்கப்படாத விடயமல்ல. 13வது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்பதை நாம் அறிவோம். சிறிலங்கா இராணுவமானது வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் தனது அதிகாரத்தையும் தலையீட்டையும் மேற்கொண்டு வருவதானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இவ்வாறான மிகவும் மோசமான நிலைப்பாடுகள் என்னை அதிருப்திக்கு உள்ளாக்கிய போதிலும், நான் எனது நம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை. இதற்கு எமது மக்களின் ஆதரவே மிக முக்கிய காரணமாகும். நாங்கள் எமக்கு முன்னுள்ள சவால்களைச் சந்திப்பதற்கான துணிவையும் உந்துதலையும் வழங்குகிறார்கள். தனிப்பட்ட நபர்கள் சிலரும் நிறுவனங்கள் சிலவும் எமது அழைப்பை ஏற்று மனிதாபிமானத்தை மீளவும் நிலைநாட்டுவதற்கான ஒத்துழைப்பை எமக்கு வழங்கி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, வலி வடக்கில் சிறிலங்கா இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 6000 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நீதிமன்றில் தமக்கு நீதி கிடைக்குமாறு வழக்குத் தாக்கல் செய்தனர். இவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதில் ஆர்வங்காட்டவில்லை. இதனால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உலருணவுகளை வழங்குமாறு நாங்கள் பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் கோரியுள்ளோம். சிறிலங்காவில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் அனைத்துலக சமூகமானது பாராமுகத்துடன் நடந்து கொள்ளவில்லை என்பதையும் நாங்கள் உணர்கிறோம். எமது பிரச்சினைகள் தற்போது உலகின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டிவிட்டன. வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாவதையும் உறுதிப்படுத்தி அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், எமக்கு முன் பல்வேறு சவால்கள் உள்ள போதிலும், எமக்கு நம்பிக்கையும் உள்ளது.
கேள்வி: வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் உங்களது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவை தொடர்பாக விளக்க முடியுமா?
பதில்: எமது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்பது எமக்கான மிகப் பலமான ஆயுதமாகும். அவர்களின் சுயநம்பிக்கையானது எமது பலத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. நாங்கள் அதிகாரமற்ற நிர்வாகத்தைக் கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் காணப்படும் சுயநம்பிக்கை என்பது மிகப்பெரிய சாதனையாகும். மக்கள் நீண்ட காலமாக இராணுவத்திற்கு அச்சப்படவில்லை. மக்கள் இராணுவத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் மிகவும் அமைதியாகவே இடம்பெறுகின்றன. இராணுவத்தை நோக்கி எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை. தெற்கில் உள்ள தமது நிலங்களை வடக்கில் தாங்கள் அபகரிப்பது போன்று அபகரித்தால் தாங்களும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம் என வடக்கில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களைத் தடுத்த சில இராணுவ வீரர்கள் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டுவதில் நாங்கள் எமது மக்களின் ஆதரவைப் பெறமுடிகிறது. எடுத்துக்காட்டாக, தனியார் நிலங்களில் தற்காலிகக் கூடாரங்களில் வாழ்ந்த எமது இடம்பெயர்ந்த மக்களுக்கு நாங்கள் அண்மையில் உலருணவு வழங்கியிருந்தோம். வடக்கில் சிறிலங்கா அரசாங்கம் எதனைச் செய்கிறது என்பதை உலகிற்கு உறுதிப்படுத்துவதுடன், உலகம் தனது கவனத்தை இன்னமும் வடக்கில் வாழும் மக்களின் பிரச்சினையில் செலுத்தி வருகிறது என்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடிகிறது.
வடக்கு மாகாண சபையைக் கொண்டு நடாத்துவதற்கான பொறிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நிதி ரீதியான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதுடன், நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முக்கிய சில விடயங்கள் தொடர்பாக நாம் ஆராய்வருகிறோம். கடந்த ஆறு மாதங்களில் நாங்கள் எவற்றைச் சாதித்தோம் என்பது தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரவை ரீதியாகவும் நாங்கள் ஒரு மீளாய்வை மேற்கொண்டிருந்தோம். இதன்மூலம் நாங்கள் இன்னமும் சாதிக்க முடியும் என்பதை அறிந்தோம். எமது மாகாணத்திற்கான பிரதம செயலர் வரவேற்கத்தக்க ஒருவராக இருந்தால், எமது மாகாணத்திற்கு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டு மனித உரிமைகள் தொடர்பில் அக்கறை கொண்டால் எம்மால் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டத்தை வரைந்திருக்க முடியும். இதன்மூலம் சிறந்ததொரு நிர்வாகத்தைக் கொண்டு நடாத்தியிருக்க முடியும். சிறிலங்கா அரசாங்கம் எமக்கு ஆதரவு வழங்கியிருந்தால், நாங்கள் ஒரு முழுமையான தேவைப் பகுப்பாய்வை முடித்துக் கொண்டு, பொருளாதார மீட்புக்கான பிரதான திட்டத்தை வரைந்திருக்க முடியும்.
கேள்வி: நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், மாகாணத்தில் தேவைப் பகுப்பாய்வை மேற்கொள்வதன் தேவையை வலியுறுத்தியிருந்தீர்கள். இதனை நீங்கள் நிறைவேற்றினீர்களா? வடக்கு மாகாண மக்களின் பிரதான அடிப்படைத் தேவைகள் எவை?
பதில்: ஒரு முழுமையான தேவைப் பகுப்பாய்வு என்பது மிகவும் அவசியமானதாகும். மனித வலு, வளங்கள், நிதி மற்றும் நேரம் போன்றவை இதற்குத் தேவையானவையாகும். வடக்கு மாகாணத்தில் தேவைப் பகுப்பாய்வொன்றை மேற்கொள்வது தொடர்பாக நான் ஐ.நாவுடன் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். ஒரு முழுமையான தேவைப் பகுப்பாய்வு மிக விரைவாக மேற்கொள்ளப்படும். இவை மிகப் பொருத்தமான வகையில் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கான கண்காணிப்புக்களை நாங்கள் மேற்கொள்வோம். மக்களின் உளவியல் -சமூகப் பிரச்சினைகள், வாழ்வாதரப் பிரச்சினைகள், நிலப் பாதுகாப்பு, அச்சத்திலிருந்து சுதந்திரம் பெறுதல் போன்ற பல்வேறு அடிப்படையான அவசியமான தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன. சட்டரீதியற்ற குடியேற்றங்கள் உட்பட பொதுமக்களின் வாழ்வில் இராணுவத்தின் தலையீடுகளைத் தடுக்கின்ற கூட்டு முடியற்சியானது மிக அவசிய தேவையாகும்.
கேள்வி: மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட 120 தீர்மானங்களில் அதிகளவானவை மாகாணத்தை நேரடியாக ஆளுவதற்கான அதிகாரத்தை வழங்கவில்லை என மாகாண சபைக்குள்ளும் வெளியேயும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தீர்மானங்களை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: இத்தீர்மானங்கள் எமது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. சிறிலங்கா அதிபர் இவ்வாண்டு ஜனவரி 02ல் வழங்கிய தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால் நாங்கள் வடக்கு மாகாண சபையை ஆளுவதற்கு உதவும். எமது மக்களுக்கு அமைதியை வழங்குவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எமது மக்களின் நிலைப்பாடுகளின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின் நாங்கள் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மக்கள் தமக்குத் தேவையானவற்றைச் சொல்ல வேண்டும். அவர்கள் எத்தகைய கனவுகளைக் கொண்டுள்ளனர், அவர்கள் எத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பதையும் அவர்கள் எவற்றுக்கு அச்சப்படுகின்றனர் என்பதையும் எடுத்துரைக்க வேண்டிய தேவையுள்ளது. சிறிலங்கா அரசாங்க அதிகார சக்தியால் எம்மீது திணிக்கப்பட்டுள்ள அடக்குமுறை இராணுவ ஆட்சியிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான பொறிமுறையாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கேள்வி: மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகள் கொண்டுள்ள நிலையில், வடக்கு மாகாண சபையானது கல்வி மற்றும் ஒத்துழைப்புக்கள் போன்றவற்றில் அதிகம் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்நிலையில் இத்துறைகளை முன்னேற்றுவதில் வடக்கு மாகாண சபை எவ்வாறா கருமங்களை ஆற்றியுள்ளது?
பதில்: கல்வியைத் துறையைப் பொறுத்தளவில், புதிய, நவீன தொழினுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதற்கான அறிக்கை ஒன்று தயாரிக்கப்படுகிறது. இது இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் அவர்கள் கொண்டுள்ள அரசியல் செல்வாக்கின் மூலம் நியமிக்கப்படவோ அல்லது இடம்மாற்றப்படவோ இல்லை. இவர்கள் கொண்டுள்ள கல்வித் திறமையின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுகின்றனர் என்பதை நாம் உறுதிப்படுத்துகிறோம். நாங்கள் அண்மையில் கூட்டுறவு தொழிலாளர் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளோம். இவர்கள் ஆணைக்குழுவில் பேருக்கு மட்டும் அங்கம் வகிக்காது, எமக்கு தொழில் சார் ஆலோசனைகளையும் வழங்குவர். கூட்டுறவுத் துறை தொடர்பில் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக நாங்கள் தொண்டர் அமைப்புக்கள் சிலவற்றுடன் கலந்துரையாடியுள்ளோம். இது மிகவிரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம். எமது பணிகள் மெதுவாக இடம்பெற்றாலும் இவை உறுதியாக இடம்பெறும்.
கேள்வி: நீங்கள் தற்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிப்பதுடன், கலந்துரையாடல்களிலும் பங்கெடுக்கிறீர்கள். இந்தவகையில், இது எவ்வாறு வடக்கு மாகாண அரசாங்கத்துடன் தொடர்பைக் கொண்டுள்ளது?
பதில்: நாங்கள் இக்கூட்டங்களில் ஆரோக்கியமான பல தீர்மானங்களை இயற்றியுள்ளோம். சர்ச்சைக்குரிய சில விடயங்கள் வரும்போது நாம் அவை தொடர்பாக ஆவேசமாக வாதிட்டு தீர்வை எட்டுகிறோம். மகிந்த சிந்தனையை செயற்படுத்துவதற்காக நாம் இந்தக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். இவ்வாறான சிந்தனைக்கு ஆதரவாக நிற்கும் தரப்பை மக்கள் முற்றாக நிராகரிக்கின்றனர். நாங்கள் எமது நிலைப்பாட்டைச் சரியாக எட்டியபின்னர், இவ்வாறான ஒரு கலந்துரையாடல் அவசியமானது எனத் தீர்மானித்தோம். இது எமது கடமையும் கூட. நாங்கள் எமது தேர்தற் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பமாக இதை நாம் கருதுகிறோம். இது எமது முதலாவது கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நீங்களும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை வரவேற்றுள்ளீர்கள். மோடி அரசாங்கம் தொடர்பான தங்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன?
பதில்: எமது உடனடித் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார். எமது அரசாங்கத்தின் மீது மோடி பல்வேறு அழுத்தங்களை வழங்கிவருகிறார். இதனால் சிறிலங்கா அரசாங்கம் மிக விரைவாக நடவடிக்கைகளை ஆற்ற வேண்டும். தமிழ்நாடானது இந்தியாவின் அரசியலில் இரண்டறக் கலந்துவிட்டது. எமது மக்களின் அரசியல் தேவைகள் தொடர்பில் மோடி அரசாங்கமும் தமிழ்நாடும் ஏற்றுக்கொள்ளத் தக்க தீர்வுகளை எட்டுவார்கள் என நாம் நம்புகிறோம்.
கேள்வி: சிறிலங்கா மீனவர் சமூகத்திற்கும் இந்திய மீனவர் சமூகத்திற்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ளன. இதனால் வடக்கு மாகாண மீனவர்கள் உண்மையில் கவலை கொண்டுள்ளனர். இந்நிலையில் வடக்கு மாகாண சபையானது ஏன் இன்னமும் மீனவர் பிரச்சினை தொடர்பில் முக்கிய நகர்வை மேற்கொள்ளவில்லை?
பதில்: நாங்கள் இதனை ஆரம்ப கட்டங்களில் மேற்கொண்டுள்ளோம். உள்ளக நீர்நிலைகளில் மீன்பிடித்தல் தொடர்பாக நாங்கள் பேசமுடியும் எனவும் ஆனால் கடல்சார் பிரச்சினைகளை மத்திய அரசாங்கமே கைக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. சிறிலங்கா மீன்பிடித்துறை அமைச்சர் இப்பிரச்சினை தொடர்பில் அதிக ஆர்வம் காட்டியதால் நாங்கள் இதிலிருந்து பின்வாங்கிக் கொண்டோம். நாங்கள் இதற்கு எமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமாயின் நிச்சயமாக உதவ முன்வருவோம். பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இவ்வாறான ஒரு பிரச்சினைக்கு நீதி எட்டுவதில் தலைமை தாங்குவதென்பது ஜனநாயக மற்றும் நடைமுறை நோக்கில் அசாதாரணமானதாகும்.
நன்றி
புதினப்பலகை
















