நாள் தோறும் தொடரும் குழு மோதல்களினால் யாழ்ப்பாணம் அதிர்ந்த வண்ணமேயுள்ளது. அவ்வகையில் கோண்டாவில் பகுதியினில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சகோதரர் மற்றும் சகோதரி ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில் கிழக்கு அரசடிப்பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த வீடொன்றினுள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பலொன்று சகட்டு மேனிக்கு வாள்களினால் வெட்டித்தள்ளியுள்ளது. வாள் வெட்டினால் படுகாயமடைந்த இரவீந்திரன் சுவிந்தன்(வயது 21) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சகோதரனான இரவீந்திரன் செந்தூரன்(வயது 23) மற்றும் சகோதரியான இரவீந்திரன் இலக்கியா(வயது 26) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனாவைத்திய சாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இளைஞர்கள் சிலர் இவர்களது வீட்டிற்கு வந்து தர்க்கித்ததாகவும் பின்னர் அவர்களே வேறு ஆட்கள் சகிதம் வந்து வாள்களால் வெட்டித்தள்ளியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அண்மையில் அச்சுவேலிப்பகுதியினில் ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இரவு படுக்கையில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தை நடத்தியவர்கள் உரும்பிராய் சிவபுரம் வீதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில், இரவு 7மணியளவில் கோண்டாவில் பகுதியிலிருந்து சென்ற குழு உரும்பிராய் பகுதியிலிருந்து வந்து தாக்கியதாக நம்பப்படும் இளைஞர்களின் வீடுகளை அடித்து நொருக்கியுள்ளதுடன், வீட்டிலிருந்தவர்களையும் மோசமாக தாங்கியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிஸார் சென்றிருந்த நிலையில் இரு ஊர் சண்டையாக அது மாறியதனால் தம்மால் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக கூறி பொலிஸார் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், உரும்பிராய் சிவபுரம் வீதி மற்றும் கோண்டாவில் அரசடி வீதி ஆகிய பகுதிகளில் மேலதிக பாதுகாப்புக்காக பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு பகுதிகளிலும் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்க்குமாறு படையினர் கூறிவருகின்றனர். குறித்த இரு கிராமங்களும் தற்போது ஊரடங்கு நிலையில் இருப்பதுபோன்ற நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதுடன், உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளேயும் செல்ல படையினர் தடை விதித்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
















