தென்னிந்திய நடிகை ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த விசுவநாதன் உருத்திரகுமாரனின் துணை அமைச்சர் ஒருவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கையூட்டு வழங்கித் தப்பியுள்ளார்.
கடந்த மாத இறுதியில் தமிழகத்திற்குப் பயணம் செய்த உருத்திரகுமாரனின் துணை அமைச்சர், தமிழீழ தாயகத்தில் உள்ள அறுநூற்று ஐம்பது பெண் பிள்ளைகளுக்கு உதவி செய்வதற்கான கலை நிகழ்வு ஒன்றை பிரான்சில் தான் நடத்த இருப்பதாகவும், இதில் தமிழக நடிகைகள், இசைக் கலைஞர்கள் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரியும் முகவர்கள் சிலரை அணுகியிருந்தார்.
இதனை அடுத்து முகவர் ஒருவரின் ஏற்பாட்டில் சென்னையில் நடிகை ஒருவரை சந்தித்த பொழுது அவரிடம் விஸ்கி மதுபானப் புட்டியன்றை சம்பந்தப்பட்ட உருத்திரகுமாரனின் துணை அமைச்சர் பரிசாக வழங்க முற்பட்டுள்ளார். எனினும் மதுபானப் புட்டியை தூக்கியெறிந்த சம்பந்தப்பட்ட நடிகை, சம்பந்தப்பட்ட நபரின் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு அங்கிருந்து அகன்றுள்ளார்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட நபரிடம் நடிகையின் முகவர் விளக்கம் கேட்டபொழுது, குறிப்பிட்ட நடிகை தமிழ்ப் பண்பாட்டின்படி நடப்பவரா? என்பதை அறிந்து கொள்வதற்காகவே தான் அவருக்கு மதுபானப் புட்டியை வழங்கியதாகவும் உருத்திரகுமாரனின் அமைச்சர் நியாயம் கற்பித்துள்ளார். இதன் பின்னர் அதே முகவரைத் தொடர்பு கொண்ட உருத்திரகுமாரனின் அமைச்சர், ஐந்து கோடி ரூபா இந்தியப் பணத்தில் மாவீரன் பண்டாரவன்னியனின் படத்தை தான் எடுக்க இருப்பதாகவும், அதில் குருவிச்சி நாச்சியாரின் வேடத்தில் நடிப்பதற்கு நடிகை ஒருவரை ஏற்பாடு செய்து தருமாறும் கேட்டுள்ளார். இதனையடுத்து பிறிதொரு நடிகையை சந்திப்பதற்கு சம்பந்தப்பட்ட முகவர் ஒழுங்கு செய்த பொழுது, சென்னை அரும்பாக்கம் ஜவகர்லால் நேரு வீதியில் 12ஆம் இலக்கத்தில் உள்ள விடுதிக்கு 08.06.2014 அன்று நள்ளிரவு 12 மணிக்கு நடிகையை அனுப்பி வைக்குமாறு உருத்திரகுமாரனின் அமைச்சர் கேட்டுள்ளார்.
இதனையடுத்து அவ்விடுதிக்கு நடிகை சென்றபொழுது, அவரை சந்திப்பு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லாது தனது தனிப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்று அவருடன் வன்புணர்வு முயற்சியை உருத்திரகுமாரனின் அமைச்சர் மேற்கொண்டுள்ளார். எனினும் அச்சந்தர்ப்பத்தில் சுதாகரித்துக் கொண்ட நடிகை, தனது கையில் இருந்த பேனாவினால் அவரைக் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று செல்பேசியில் தமிழக காவல்துறையினரை அழைத்துள்ளார்.
இதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தியும், அங்கு வந்த காவல்துறை அதிகாரிக்குக் கையூட்டளித்தும் கைது செய்யப்படும் நிலையில் இருந்து தன்னை உருத்திரகுமாரனின் அமைச்சர் பாதுகாத்துள்ளார்.
தற்பொழுது மீண்டும் பிரான்சிற்குத் திரும்பியிருக்கும் இவர் தன்னை யாழ்ப்பாண பல்கலைக்கழகம், பிலிப்பைன்சிலுள்ள மணிலா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் விரிவுரையாளர் என்றும், தான் பிரான்சில் ஒரு சத்திரசிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்து வருவதாகவும் கூறிக் கொள்கின்றார்.
கடந்த ஆண்டு ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்ற பொழுது அங்கு பூட்டிய அறையன்றுக்குள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நபர்களின் மத்தியில் ‘நாங்கள் மனிதர்கள். அதனால் எங்களுக்கு மனித உரிமைகள் தேவை’ என்று மிகவும் முட்டாள்தனமாக உரையாற்றி விட்டு, மனித உரிமைகள் பேரவையில் தமிழீழ மக்களின் மனித உரிமைகளுக்காகத் தான் உரையாற்றியதாகப் பொய்ப்பரப்புரை மேற்கொண்டு ‘எருமை மாட்டில் ஏறப்பிளேன் ஓட முயன்றவர்’ இவர்.
தற்பொழுது தமிழகத்தில் உள்ள நடிகைகள், கலைஞர்கள் போன்றோரின் முகவர்களுடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், பிரான்சிற்கு நடிகைகளையும், கலைஞர்களையும் அனுப்பி வைக்குமாறும், சம்பந்தப்பட்ட நடிகைகள் விரும்பினால் பிரான்சில் உள்ள தமிழ் தொழிலதிபர்களுடன் அவர்கள் உல்லாசமாக இருந்து பணம் சம்பாதிப்பதற்கு உதவுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் கூறி வருகின்றார்.
இவரைப் போன்று 2011ஆம் ஆண்டு தென் சூடானில் இளம்பெண்களுடன் பாலியல் வன்புணர் வில் ஈடுபடமுற்பட்ட உருத்திரகுமாரனின் பிறிதொரு அமைச்சர் கைது செய்யப்பட்டுக் கையூட்டளித்த பின்னர் தப்பி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பெண்களைப் போகப் பொருளாகக்கருதியும், தென்னிந்திய நடிகைகளிடையே பாலியல்தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும் நடந்து கொள்ளும் இவர் போன்ற உருத்திரகுமாரனின் அமைச்சர்களின் கையில் தமிழீழம் கையளிக்கப்பட்டால் தமிழீழப் பெண்களின் நிலை என்னவாகும்? என்று உருத்திரகுமாரனின் அமைச்சரால் பாதிக்கப்பட்ட நடிகை ஈழமுரசின் தமிழக செய்தியாளரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
நன்றி: ஈழமுரசு
















