பேருவளை, தர்ஹா நகர் மற்றும் அளுத்கம ஆகிய இடங்களில் தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக அப்பகுதி முஸ்லிம்கள் அனைவரும் எங்கும் வெளியேற முடியாதவாறு பள்ளிவாசல்களில் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர்.
தமக்கு இதுவரை பூரண பாதுகாப்போ உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளோ செய்து தரப்படவில்லை என்றும், எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கின்ற போதிலும் அதில் எதுவித உண்மையும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
தர்ஹா நகர் சினாவத்தை எனும் இடத்தில் உள்ள பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்துள்ள முஹம்மத் சலீம் என்ற முஸ்லிம் சகோதரர் கூறுகையில், “தர்ஹா நகரில் உள்ள பல பள்ளிவாசல்களில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தஞ்சம் புகுந்துள்ளனர். ஓரிரு பொலிஸாரும், ஓரிரு விசேட அதிரடிப் படையினரும் எமது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அல்ல. பேரினவாதிகள் கூட்டம் கூட்டமாக வந்து எம்மைத் தாக்குகின்றனர். பாதுகாப்புப் படையினரின் முன்னிலையில் தான் இது நடக்கின்றது. பள்ளிவாசலில் இருக்கும் எம்மைத் தாக்க வந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள ஓரிரு பொலிஸாரால் எதுவும் செய்ய முடியாது; எம்மாலும் எதுவும் செய்ய முடியாது.
செத்து மடிய வேண்டியது தான். அல்லாஹ்வே துணை” – என்றார். அதே பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ள மற்றுமொரு முஸ்லிம் சகோதரர் கூறுகையில்,
“எமது சகோதரர்கள் நான்கு பேர் சிங்களக் காடையர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுள் பெண் ஒருவரும் அடங்குகிறார். 80இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அதேவேளை, முஸ்லிம் இளைஞர்கள் பலரைக் காணவில்லை. இதுவரைக்கும் இந்தப் பள்ளிவாசலில் இருக்கும் எம்மை வந்து பார்ப்பதற்கு – எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எம்மைப் பார்க்க வருபவர்களைப் பொலிஸார் தடுத்துநிறுத்துகின்றனர். உண்மை நிலைமை வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக பொலிஸார் ஊடகங்கள் வருவதற்குத் தடைவிதித்துள்ளனர். எந்தவொரு அரசியல்வாதியும் எம்மை வந்து பார்க்கவில்லை. எமது நிலைமை படுமோசமாக உள்ளது. நாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கின்றோம்” – என்றார்.
















