மகிந்தவை பார்க்க 1000 ரூபாய்…. : வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் நடந்த பகல் கொள்ளை.

vavunia-schoolவவுனியாவின் பிரபல பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாகிய சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் மகிந்தவின் வருகையை முன்னிட்டு மாணவர்களிடம் 1000 ரூபாய் பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் இதனால் பலர் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் வர்ணப்பூச்சுக்காக ஒவ்வொரு மாணவர்களிடமும் இருந்து ஆயிரம் ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளது. சில வகுப்புக்களுக்கு இக் கட்டணம் அறவிடப்படாது வீட்டில் இருந்து பெற்றோர் வந்து வேலை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கட்டணம் என்னும் பெயரில் ஆயிரத்து இருநூறு ரூபாய் அறவிடப்படப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் மகிந்தோதய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டத்தினை திறப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பாடசாலைக்கு வரவுள்ளார். இதை முன்னிட்டும் மாணவர்களிடம் இருந்து மகிந்தவின் வருகைக்காக 1000 ரூபாய் அறவிடப்பட்டு வருகிறது.

குறித்த பாடசாலைக்கு அரசினால் பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் இவ்வாறு வேறு வேறு தேவைகளுக்கு எனக் கூறி 3200 ரூபாய் வீதம் அறவிடுவதால் பலர் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்வாறு அறவிடப்படும் பணத்தில் அபிவிருத்திச் சங்க பணத்திற்கு மட்டுமே சிட்டை வழங்கப்படுவதுடன் ஏனைய பணத்திற்கான சிட்டைகள் வழங்கப்படவில்லை. கூலி வேலை செய்தாவது தன் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்றும் பிறருடைய உதவியிலும் கல்வி கற்கும் பல மாணவர்கள் இப் பணத்தினை செலுத்த முடியாது திணறி வருவதாக தெரிய வருகிறது.

இலவசக் கல்வித் திட்டம் தற்போதும் வடமாகாணத்தில் நடைமுறையில் இருக்கின்றதா? என்பதை வடமாகாண கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவிக்கின்றனர். வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ள நிலையில் குறித்த சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் மாணவர்களின் இடைவிலகலை கட்டுப்படுத்த முடியாத சூழல் அதிகரிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags: , ,

Leave a Reply