தட்டுவன்கொட்டியின் கதவுகளை அரசியல்வாதிகள் தேர்தலின்போது மட்டுமே தட்டுகிறார்கள் – மக்கள் விசனம்

ingaranesaபோரினாலும் இயற்கையினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமம் தட்டுவன்கொட்டி. இப்படி ஒரு கிராமம் ஆனையிறவுக்குக் கிட்ட இருக்கின்றது என்பதே பலருக்குத் தெரியாது.

அரசியல்வாதிகள்கூட, தட்டுவன்கொட்டியின் கதவுகளைத் தேர்தலின்போது மட்டுமே தட்டுகிறார்கள் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் தட்டுவன்கொட்டி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

(16.06.2014) தட்டுவன்கொட்டிக்குச் சென்ற அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அங்குள்ள வயல்கள், குளங்கள் மற்றும் பாடசாலையைப் பார்வையிட்ட பின்னர் பொதுமக்களைத் தட்டுவன்கொட்டி பொதுநோக்கு மண்டபத்தில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். இதன்போதே அம்மக்கள் மேற்குறிப்பிட்டவாறு முறையிட்டுள்ளார்கள்.

மிகப்பழமை வாய்ந்த கிராமமான தட்டுவன்கொட்டிக்கு அருகாமையிலேயே ஆனையிறவு இராணுவமுகாம் அமைந்திருந்ததால், இப்பகுதி மக்கள் பலதடவைகள் இடம்பெயர நேர்ந்தது. குடிதண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாதபோதும், சொந்த மண்ணைவிட்டு நிரந்தரமாக வெளியேற விரும்பாத இம்மக்கள் 2010ஆம் ஆண்டில் இருந்து மீளவும் குடியேற ஆரம்பித்துள்ளார்கள். மாகாணசபைத் தேர்தலின்போது அரசாங்கத் தரப்பினர் தட்டுவன்கொட்டிக்கு மின்சாரவசதி செய்து தருவதாகக் கூறியே வாக்குக் கேட்டனர். அடையாளமாக ஒரு மின்சாரக் கம்பத்தையும் நாட்டிச் சென்றார்கள். ஆனால், தேர்தலில் தோற்ற பின்னர் பழிவாங்கும் நடவடிக்கையாக மின்வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது என்று குற்றம்சாட்டிய பிரதேசவாசிகள், தங்கள் பிள்ளைகள் இரவு நேரங்களில் குப்பி விளக்கிலேயே படிக்க நேர்வதால் கற்றல் செயற்பாடுகள் பாதி;க்கப்படுவதாகவும், இரவுநேரங்களில் கும்மிருட்டுக் காரணமாக அவசர தேவைகளுக்குக்கூட வெளியே சென்றுவர முடியாது இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.

நல்ல தண்ணீர் வசதியற்ற இக்கிராமத்துக்குக் கரைச்சிப் பிரதேசசபையினர் தினமும் ஒருதடவை வாகனத்தின் மூலம் குடிதண்ணீர் விநியோகித்து வருகின்றனர். அவசர தேவைகளுக்கு, கிராமத்தின் ஒரேஒரு பாடசாலையான கண்ணகையம்மன் மகாவித்தியாலயத்தின் மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் இருந்தும் நீர் பெறப்படுகிறது. எரிபொருள் செலவு காரணமாகக் கரைச்சிப் பிரதேசசபை, முழுக்கிராமத்துக்குமான தண்ணீரை குறிப்பிட்ட மூன்று, நான்கு இடங்களில் வைத்தே வழங்கிவருகிறது. தண்ணீருக்காகக் கரைச்சிப் பிரதேசசபைக்கு நன்றி தெரிவித்த பெண்கள், வயதுமுதிர்ந்தவர்களால் தண்ணீரை அதிக தூரத்துக்குக் காவிச் செல்ல முடியாது இருப்பதால் நீர் வழங்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு செய்துதருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தார்கள்.

கடற்றொழிலையும் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பகுதி மக்கள் மழையை நம்பியும், இரணைமடுவில் இருந்து வழிந்துவரும்;;;; நீரையும் நம்பியே விவசாயத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், மழை பொய்த்து, இரணைமடுவும் வற்றிப்போனதால் நெற்செய்கை இம்முறை முற்றாக அழிந்து போய்விட்டது. இதனால் தட்டுவன்கொட்டியின் பிரதான குளங்களான பரவக்குளத்தையும் காட்டுக்குளத்தையும் புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை வைத்தனர்.

இவர்களது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அமைச்சர், விரைவில் தனது அமைச்சுக்கு உட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளை இப்பிரதேசத்துக்கு அழைத்துவந்து விவசாயத்துக்கு வேண்டிய நீரை நிரந்தரமாகப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்டு ஆவன செய்து தருவதாக வாக்குறுதியளித்தார். அத்தோடு, ஏனைய முறைப்பாடுகள் தொடர்பாக உரிய தரப்பினரோடு பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் அமைச்சர் பொ. ஐங்கரநேசனுடன் கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப்பணிப்பாளர் அ.செல்வராசா, தட்டுவன்கொட்டி கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் நா.தியாகராஜா, முன்னாள் கல்விப்பணிப்பாளர் நா. தணிகாசலம்பிள்ளை, கண்ணகை அம்மன் வித்தியாலய அதிபர் த.கருணானந்தன், வைத்திய கலாநிதி த. சுஷpதரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்;தார்கள்

Tags: , ,

Leave a Reply