தற்போது எல்லாம் பத்திரிக்கை தர்மத்தை கொலை செய்கிறார்கள் என்று நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த நடிகை குஷ்பு கடந்த திங்கட்கிழமை அக்கட்சியில் இருந்து விலகினார். இது குறித்து ஊடகங்களில் பல்வேறு வகையான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் வேறு எந்த கட்சியிலும் சேர முயற்சி செய்யவில்லை. சில செய்தித்தாள்கள் தங்கள் வியூகங்களை எழுவதை நிறுத்திக் கொண்டால் அதை வரவேற்பேன்.
நான் கட்சியில் இருந்து விலகியது என் தனிப்பட்ட முடிவு. இது குறித்து உகந்த நேரத்தில் ஊடகங்களிடம் பேசுவேன். அதுவரை ஊடகங்கள் தங்கள் பாட்டுக்கு செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் கட்சியில் இருந்து விலகியது குறித்து இதுவரை எந்த பத்திரிக்கையுடனும் பேசவில்லை. அப்படி இருக்கையில் ஒரு செய்தித்தாளில் நான் கூறியதாக செய்தி வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைகிறேன்.
இந்த செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் தானாக செயல்படுகின்றனவா அல்லது சிலரின் கட்டளையின்பேரில் வேலை செய்கின்றனவா என்று வியக்கிறேன். எதுவாக இருந்தாலும் இது வெட்கக்கேடானது.
நல்ல செய்தியோ, கெட்ட செய்தியோ அது உண்மையான செய்தியாக இருக்கட்டும். அண்மை காலமாக பிரேக்கிங் நியூஸ் அல்லது செய்தியை முதன்முதலாக தருவோர் பத்திரிக்கை தர்மத்தை கொலை செய்கின்றனர்.
















