மாற்று இதயம் பொருத்தப்பட்ட மும்பை பெண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசத் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையை சேர்ந்த அவோவி என்ற பெண் இதயக்கோளாறு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதனின் இதயம் அவோவிக்கு திங்கள்கிழமை இரவு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் கூறுகையில், அவோவிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது.
பின்னர், அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், செவ்வாய்க்கிழமை காலையில் அகற்றப்பட்டது. மேலும், இப்போது அந்த பெண் பேசத் தொடங்கிவிட்டதாகவும், தற்போது அவருக்கு வாய் வழியாக திரவ உணவு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
















