புதிய இஸ்லாமிய நாடொன்று உதயமாகப் போகின்றதா..? – விவேகன்

irag-photoஆமை புகுந்த வீடு உருப்படாதோ இல்லையோ, அமெரிக்கா புகுந்த நாடு உருப்படாது என்பதற்கு இன்னொரு உதாரணமாக உருமாறியிருக்கின்றது ஈராக். 2003ம் ஆண்டு ஏதேதோ திட்டங்களுடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுடன் ஈராக்கை ஆக்கிரமித்தது அமெரிக்கப் படைகள். பேரழிவு விளைவிக்கும் வேதியியல் படைக் கலன்கள் இருக்கிறது என்று குற்றம்சாட்டி உள்நுழைந்த அமெரிக்க தலைமையிலான படைகள், நிரந்தர ஆட்சி நடத்திய சதாம் உசேனின் ஆட்சியைத் துடைத்தழித்து ஈராக்கை மீட்டதாக அறிவித்தன. ஆனால், ஈராக் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அங்கு குண்டு வெடிக்காத நாளில்லை, மனிதர் சாகாத பொழுதில்லை எனும் அளவிற்கு தினந்தோறும் குண்டுவெடிப்புக்களால் அந்தப் பூமி அதிர்ந்துகொண்டிருக்கின்றது. சதாம் உசேன் ஆட்சியில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சன்னி, ஷியா முஸ்லிம் பிரிவுகளுக்கு இடையிலான மோதல்கள் இப்போது விஸ்வரூபம் எடுத்து ஈராக் துண்டாடப்படும் நிலைக்கு வந்துநிற்கின்றது.

சதாம் உசேன் இருக்கும் வரைதான் ஈராக் அவருக்காக ஆடும், அவரை அழித்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என நினைத்து அவசர அவசரமாக சட்டத்தின் முன் நிறுத்தி மரண தண்டனையையும் நிறைவேற்றி விட்டனர். ஆனால், இப்போது அவரது ஆதரவுப் படைகள் ஈராக்கை கட்டுப்படுத்தும் அளவிற்கு வளர்ந்துநிற்கின்றன. சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பினர் (ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்து பெட்டிச் செய்தியில் பார்க்கவும்), ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக ஈராக்கில் தாக்குதல்கள் தொடுத்துள்ளனர்.

2011ம் ஆண்டு ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கா படைகள் முழுமையாக வெளியேறியது. அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து சதாம் ஆதரவுப் படையினர் ஈராக் அரசு படைகள் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் மெதுமெதுவாக தாக்குதல்களை தொடங்கினர். கடந்த ஆறு மாதங்களாக தாக்குதல்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், முதலில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் மற்றும் பலூஜா நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியது. பின்னர் அங்கிருந்து முன்னேறி மொசூல், கிர்குக் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றினர். ஈராக்கின் நினிவே மாகாணத்தின் தலைநகரான மொசூலில் கடந்த சில நாட்களாகவே அரசு படையினருக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.

முக்கிய காவல் நிலையங்களையும் சிறைச்சாலைகளையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமது ஆதரவாளர்களையும் விடுவித்தனர். அத்துடன், அங்கிருந்த தூதரங்களுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களையும் கடத்திச் சென்றனர். இதில் துருக்கித் தூதரகத்தில் இருந்த 50ற்கும் மேற்பட்டவர்களும் அடங்கும். ஐ.எஸ்.ஐ.எஸ் பிடித்து வைத்துள்ள தமது நாட்டுக் குடிமக்களுக்கு ஏதாவது பாதகம் நடந்தால் ஐ.எஸ்.ஐ.எஸ் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும் என்று எச்சரித்துள்ள துருக்கி, தமது நாட்டு மக்களை மீட்பதற்காக நேட்டோவின் உதவியை நாடியுள்ளது. நோட்டோவின் ஓர் உறுப்பு நாடான துருக்கி, நேட்டோவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதனையடுத்து நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போக் ரஸ்முசென் துருக்கி சென்று இந்த கடத்தல் விவாகாரம் குறித்து பேச்சு நடத்தவுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். இனரின் நடவடிக்கை எந்த விதத்திலும் நியாயப்படுத்தக் கூடியது அல்ல எனத் தெரிவித்துள்ள அவர், மேலும் பணையக் கைதிகளை உடனடியாக விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பல்வேறு இராணுவத் தளங்களையும் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், இராணுவத்தின் பெருமளவு ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றியுள்ளதால் ஈராக் அரசு பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் ஓயாத அலை நடவடிக்கையின் போது சிங்கள இராணுவம் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, சீருடைகளை களைந்துவிட்டு மாற்றுடை அணிந்து தலைதெறிக்கத் தப்பியோடியதைப்போன்று, ஈராக் படையினர் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, இராணுவ உடைகளைக் களைந்துவிட்டு மக்களோடு மக்களாக நகரை விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதற்கிடையே, அவர்களிடம் அகப்பட்டுக்கொண்ட 1700 ஈராக்கியப் படையினருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பான சில நிழற்படங்களையும் தங்கள் சமூகவலைத் தளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் இது உறுதி செய்யப்படவில்லை என ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஈராக்கில் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்து 5 இலட்சம் மக்களை விரட்டியடித்துள்ளனர். உயிருக்குப் பயந்து அருகில் உள்ள ஈராக்கின் சுயாட்சிப் பகுதியான குர்திஷ்தானுக்கு பெருமளவு மக்கள் சென்றவண்ணம் உள்ளனர். அவர்களுக்காக குர்திஷ்தான் அரசு அதிகாரிகள் தற்காலிக முகாம்களை அமைத்து உதவி வருகின்றனர். வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று ஐ.நா. அகதிகள் அமைப்பிற்கு குர்திஷ்தான் பிரதமர் நெச்சிர்வன் பர்ஜானி அவசர வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

Eelamurazu 239_Eelamurazu 239.qxdஇதேவேளை, ஈராக்கின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள பாய்ஜி பகுதியையும் தீவிரவாதிகள் தங்கள் வசப்படுத்தி விட்டதாக மற்றொரு தகவல் கூறுகிறது. தற்போது தலைநகர் பக்தாத் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால், பக்தாத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகின்றது. அங்கிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

இதனிடையே, வடக்கு பாக்தாத் விமான படை தளத்தில் இருந்து ஏராளமான அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றன. மேலும் அமெரிக்க இராணுவத்துக்கான ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு முயன்று வருகின்றனர்.

அதேவேளையில், ஏராளமான ஈராக்கிய இளைஞர்கள் தாமாக முன்வந்து தீவிரவாதிகளுக்கு ஏதிராகப் போரிட இராணுவத்தில் சேரவும், தன்னார்வப் பணிகளில் ஈடுபடவும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்களுக்குள் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்களும் ஊடுருவிடலாம் என்பதால் அவர்களை உள்வாங்குவதில் ஆட்சியாளர்கள் தயக்கமடைந்துள்ளனர். எனினும், பக்தாதை நோக்கி முன்னேறி வரும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தவும் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கவும் ஈராக் இராணுவம் தயாராகி வருகின்றது. தற்போது முன்னேறும் தீவிரவாதிகளை இலக்குவைத்து கடுமையான விமானத் தாக்குதலை ஈராக்கிய விமானப்படை நடத்திவருகின்றது.

இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டுள்ள சன்னி பிரிவு தீவிரவாதிகளை விரட்டியடிக்கும்படி ஷியா பிரிவினருக்கு அவர்களது மதகுரு கிராண்ட் அயாதுல்லா அலி அல்-சிஸ்தானி உத்தரவிட்டுள்ளார். கையில் ஆயுதம் ஏந்தி பாக்தாத் நோக்கி வரும் தீவிரவாதிகளை முறியடியுங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு பாக்தாத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அறை கூவல் விடுத்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கை ஓங்கி வருவது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைக் கவலையடைய வைத்துள்ளது. அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் தமது அதிர்ச்சியை வெளிப்படையாக வெளியிட்டுள்ளார். புதிதாக ஓர் இஸ்லாமியை நாட்டை உருவாக்கும் வகையில் ஒரு புதிய தீவிரவாத குழு விரைந்து செயல்பட்டுவருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ‘சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரால் அந்த நாட்டுக்கு மட்டும் அல்லாமல் அந்த பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. ஈராக்கிலும் இதனால்தான் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன’ என்று நியூயோர்க் நகரில் நடைபெற்ற வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சபையில் பேசிய ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.

‘ஈராக்கில் உள்ள நகரங்களை கைப்பற்றும் அளவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வளர்ந்து செல்லும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இவ்வாறு நாடுகளின் பகுதிகளை கைப்பற்றுவதன் மூலமாக, சர்வதேச நாடுகளின் எல்லைகளையும் அந்த அமைப்பு மாற்றிவருகிறது. கைப்பற்றிய பகுதிகளை கொண்டு இஸ்லாமிய நாட்டை உருவாக்க வாய்ப்புள்ளது. இப்போது பிரச்சினை முற்றிவிட்டது. சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜிகாதி அமைப்புகள் ஆயுதப் பயிற்சியில் சிறந்தவையாக உள்ளன. அவர்களை முறியடிக்க ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து போர்களில் பயிற்சிபெற்ற ஆயிரம் படையினரையாவது சிரியாவுக்கு அனுப்ப வேண்டும். ஒரு நாட்டின் முக்கிய பொறுப்பில் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் விரும்புவது, சிரிய புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியிருக்க வேண்டும் என்பதுதான்’ என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமது இராணுவம் பாரிய பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி இரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிராக விமானப்படை தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு ஈராக் அனுமதி அளிக்க உள்ளதாக வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் படையினர் தரை நடவடிக்கை எதிலும் ஈடுபடமாட்டார்கள் என்றும் தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலமோ அல்லது விமானப்படையினரின் விமானங்கள் மூலமோ வான்தாக்குதல்கள் மட்டுமே நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாஷிங்டனில் ஏ.எஃ.பி. செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், ‘தீவிரவாதிகளுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்துவது உட்பட ஈராக்குக்கு இராணுவ உதவிகளை அளிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது` என்று தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் யோசனை அமெரிக்காவுக்கு உள்ளதா? என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அவர், எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்று கூறிவிட மாட்டேன். ஈராக்கிலும் சரி, சிரியாவிலும் சரி இந்தத் தீவிரவாதிகள் தங்களுக்கு என்று நிலையான இடத்தை உருவாக்கிவிடக்கூடாது. இது தொடர்பாக ஈராக்கியர்களுடன் கலந்தாலோசனை நடந்து வருகிறது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அங்கு உடனடி இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பதில் அளித்தார். எனவே ஈராக்கில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா போர்க் களத்தில் இறங்காமல் ஈராக்கினால் சமாளிக்கமுடியாது என உறுதியாகக் கூறப்படுகின்றது.

தற்போது, ஈராக்கிய கடற்பரப்புக்கு அமெரிக்கா தமது யுத்தக் கப்பலை அனுப்பி வைத்துள்ளது. வட அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் டபுள்யூ.ஏச் புஷ்` என்ற பெயருடைய போர்க் கப்பல் வட அரபிக் கடலில் இருந்து பெர்சியன் வளைகுடா நோக்கி புறப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் சக் ஹேகல் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ். அதிரடி ஆக்கிரமிப்பு நடவடிக்கை அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளை மட்டுமின்றி அயலிலுள்ள இஸ்லாமிய நாடுகளையும் அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக ஈரான் இதனால் பேரதிர்ச்சி அடைந்திருக்கின்றது. சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் ஈரான் ஈராக்குடன் உறவுகளை வளர்த்துக்கொண்டது. ஈராக்கின் பக்தாத்தில் ஏராளமான முதலீடுகளையும் ஈரான் செய்திருக்கின்றது. இந்நிலையில் அவற்றைப் பாதுகாக்கவும் கர்பலா புனித நகரத்தை அழிவில் இருந்து பாதுகாக்கவும் எனக்கூறி ஈரான் தமது குறிப்பிட்ட ஒரு தொகைப் படைகளை ஈராக்குக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதேபோல் தமது நாட்டு ஈராக் எல்லைகளிலும் ஈரான் படைகள் ஏராளமாக குவிக்கத் தொடங்கியுள்ளது.

எதிரிக்கு எதிர நண்பன் என்பதுபோல தற்போதைய நிலையில் சதாம் உசேன் ஆதரவுப் படையினர் விஸ்வரூபமெடுத்துள்ளதால் அவர்களை எதிர்கொள்ள அமெரிக்கவும் ஈரானும் கூட்டிணைவதுகூட ஆச்சரியப்படக்கூடியதல்ல. ஈரானுடன் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை எப்படி முறியடிக்கலாம் என்பது குறித்து அமெரிக்காவும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஈராக்கின் முஸ்லிம் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் ஒத்துழைத்து செயற்பட விரும்புவதாக ஈரான் வெளிப்படையாகத் அறிவித்துள்ளது. ஆனால், ஈரானுடன் இணைந்து அமெரிக்கா நடவடிக்கையை மேற்கொண்டால், ஈரானைப் பரமவிரோதியாகக் கருதும் சவுதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகின்றது. எதுஎவ்வாறாயினும், சதாம் உசேனால் கட்டிக் காப்பாற்றப்பட்ட ஈராக் என்ற தேசம் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது. இப்போது அது பல்வேறு துண்டங்களாக சிதறப்போவதும் உறுதியாகி வருகின்றது.

நன்றி: ஈழமுரசு

Tags: , ,

Leave a Reply