பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமான ரூட் ரவி அவர்கள் அனுப்பிய தென்னாபிரிக்கத் தூதுச் செய்தியையிட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகள் மெய்மயங்கிப் போகாததற்கு ஈழப்பிரச்சினையில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாடு பற்றிய தெளிவான புரிதலை 2005ஆம் ஆண்டிலேயே அவர்கள் கொண்டிருந்தமை மட்டும் காரணமல்ல.
ஈழத்தீவில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் போர்வையில் 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா மேற்கொண்ட இன்னுமொரு நடவடிக்கையும் இதற்குக் காரணமாக இருந்தது எனக் கூறலாம். தென்னாபிரிக்காவின் ஜொகானெஸ்பேர்க் நகரில் உள்ள றோஸ்பாங்க் விடுதியில் 24.04.2007 அன்று தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் ஒழுங்கமைப்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனை தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்தாலும்கூட இம்மாநாட்டில் வெளியுறவுத்துறை துணை அமைச்சர்கள் மட்டத்தில் கூட எவரும் கலந்து கொள்ளவில்லை. மாறாக தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் தூதுவர்களான ஜே.எம்.மற்றிஜிலா, பி.எம்.பெற்றோ ஆகிய இரண்டு இராசதந்திரிகள் மட்டுமே பங்கேற்றனர்.
இம் மாநாட்டில் தென்னாபிரிக்க அரசாங்கத்தில் அதிகாரம் பொருந்தியவர் என்று கூறக்கூடியவராக அப்போதைய தொலைத்தொடர்பாடல் துணை அமைச்சரும், ‘ஒப்ரேசன் ஆக்ஷ்போர்ட்’ நடவடிக்கையின் பிதாமகனுமான றோய் படையாட்சி மட்டுமே கலந்து கொண்டார். இம் மாநாட்டில் படையாட்சிக்கு உதவியாக தென்னாபிரிக்காவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான வெள்ளையினத்தவரான றோயெல்வ் மேயர் அவர்கள் பங்கேற்றார்.
இதில் சிறீலங்கா அரசின் சார்பில் தென்னாபிரிக்காவிற்கான அதன் தூதுவர் அருண ராஜகருண, ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் முதன்மை ஆயுததாரியும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.
மறு அணியில் தென்னாபிரிக்க தமிழ் சமூகத்தின் சார்பில் தென்னாபிரிக்க தமிழர் சம்மேளனம், நீதிக்கும் சமாதானத்திற்குமான திராவிடர் அமைப்பு, கௌரெங்க் பிராந்திய தமிழர் சம்மேளனம், குவா-சூளூ பிராந்திய தமிழர் சம்மேளனம் போன்றவற்றினதும், அவற்றின் உப அமைப்புக்களினதும் தலைவர்கள் – பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் போர்வையில் இம்மாநாட்டை தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்தாலும் இதில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்ட விடயம் இராணுவ அமைப்பு என்ற நிலையிலிருந்து அரசியல் தீர்வொன்றை ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பரிணமிப்பதற்கான புறநிலைகளை ஏற்படுத்துவதாகவே இருந்தது.
இம் மாநாட்டில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் முதன்மை ஆயுததாரியான டக்ளஸ் தேவானந்தா, ஒரு ஆயுதப் போராட்ட இயக்கம் என்ற நிலையில் இருந்து எவ்வாறு ஒரு ‘அரசியல் கட்சியாக’ சனநாயக நீரோட்டத்தில் தான் தலைமை தாங்கும் ஈ.பி.டி.பி இணைந்து கொண்டது என்பது பற்றி நீண்ட விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார். இதனை வேண்டா வெறுப்பாக ஆனந்தசங்கரி செவிமடுத்த வண்ணம் இருந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை டக்ளஸ் தேவானந்த திட்டித் தீர்க்கும் கட்டம் வந்த பொழுது, பெரும் உற்சாகத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு டக்ளசின் வசைபாடல்களை ஆமோதித்த வண்ணம் இருந்தார்.
பின்னர் தனது முறை வந்த பொழுது, டக்ளஸ் தேவானந்தாவிற்குப் போட்டியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆனந்தசங்கரியும் திட்டித் தீர்ப்பதற்குத் தயங்கவில்லை. தான் ‘ஒரு பழுத்த மிதவாத அரசியல்வாதி’ என்பதை அவ்விடத்தில் நினைவூட்டிக் கொண்ட ஆனந்தசங்கரி, மிதவாத அரசியலையும், ஆயுதப் போராட்ட அரசியலையும் கண்கூடாகப் பட்டறிந்து கொண்ட ‘பழுத்த அரசியல்வாதி’ என்ற வகையில் தனக்கு நீண்ட அனுபவம் இருப்பதாகவும், ஆனால் தனது சொல்லைக் கேட்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இல்லை என்றும் வசைபாடினார்.
அதுவும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய கட்டம் வந்த பொழுது, ‘ஆயுதப் போராட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது என்பதை நான் பல தடவைகள் பிரபாகரனிடம் கூறிவிட்டேன். ஆனால் அதனைக் கேட்பதற்கு அவர் தயாராக இல்லை’ என்று நீலிக்கண்ணீர் வடித்தார். ஆயுதப் போராட்டத்தை தமிழீழத் தேசியத் தலைவர் கைவிடாது இருப்பதற்கு அவரைச் சுற்றியிருப்பவர்களும் ஒரு காரணம் என்று அவ்விடத்தில் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி, ‘அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே பிரபாகரனின் ஆயுதப் போராட்ட சிந்தனையை ஊக்குவித்து வந்ததால் அவருக்கு அதனைக் கைவிட விருப்பம் இல்லை’ என்றும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் திட்டித் தீர்த்தார். தேசத்தின் குரலின் மறைவுக்கு பின்னரும் ஆயுதப் போராட்டத்தை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கைவிடாதிருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு காரணம் என்றும் அவ்விடத்தில் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி, தனது சகபாடியான இரா.சம்பந்தனையும் திட்டித் தீர்க்கப் பின்னிற்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது மிகப் பெரும் தவறு என்றும், இது இலங்கைத் தமிழ் அரசியலில் சனநாயக வெளிக்கான கதவுகளை அடைத்திருப்பதாகவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டார். இதற்கு ஒத்தூதிய டக்ளஸ் தேவானந்தா, சனநாயகம், பன்மைத்துவம், சகவாழ்வு போன்ற ‘மும்மணித் தத்துவங்கள்’ பற்றிய வகுப்புக்கள் தமிழீழ தேசியத் தலைவருக்கு எடுக்கப்பட வேண்டும் என்றும், இதனை தென்னாபிரிக்கா செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வசைபாடும் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருந்த மாநாட்டில் அமைச்சர் றோய் படையாட்சியின் முறை வந்த பொழுது, ஆனந்தசங்கரியினதும், டக்ளஸ் தேவானந்தாவினதும் கருத்துக்களை தென்னாபிரிக்க அரசாங்கம் கவனத்தில் எடுப்பதாக படையாட்சி உறுதியளித்தார். ஆயுதப் போராட்ட இயக்கம் என்ற நிலையில் இருந்து அரசியல் கட்சி என்ற நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை மாற்றியமைக்கும் இலக்குடனேயே ஈழப்பிரச்சினைக்கான சமாதான முயற்சிகளில் தென்னாபிரிக்கா பங்களிக்க முற்படுவதாகவும் அவ்விடத்தில் படையாட்சி கோடிட்டுக் காட்டத் தவறவில்லை. படையாட்சியின் இக்கூற்றை மாநாட்டில் கலந்து கொண்ட தென்னாபிரிக்காவிற்கான சிறீலங்கா தூதுவர் அருண ராஜகருண அவர்கள் மட்டுமன்றி ஆனந்தசங்கரியும், டக்ளஸ் தேவானந்தாவாவும் வரவேற்றனர்.
இதுபற்றி இம்மாநாட்டில் கலந்து கொண்ட தென்னாபிரிக்க தமிழ் அமைப்பொன்றின் பிரதிநிதியருவரால் அப்போதைய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு அக்குவேறு ஆணிவேராகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இம் மாநாட்டில் என்ன நடந்தது என்பது தொடக்கம் எவரெவர் என்னென்ன பேசினார்கள் என்பது வரை தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாகத் அறிந்திருந்தது பற்றி அறிந்திருக்காத பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமான ரூட் ரவி, ஏதோ தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இம்மாநாட்டை தென்னாபிரிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்தது போன்ற தொனியில் ஓராண்டுக்குப் பின்னர் 19.04.2008 அன்று புதிய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரான பா.நடேசன் அவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதிலும் படையாட்சியைப் போற்றிப் புகழ ரூட் ரவி தவறவில்லை.
ரூட் ரவி அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அவ் அறிக்கையின் சில பகுதிகளின் தமிழ் மொழியாக்கம் வருமாறு:
‘தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டின் நோக்கம் சிறீலங்கா அரச தூதுக்குழுவிற்கும், தென்னாபிரிக்க தமிழ் சமூகத் தலைமைக்கும் இடையில் ஆக்கபூர்வமான பேச்சுக்களை ஏற்படுத்துவதற்கான புறநிலைகளை தோற்றுவிப்பதாகும்.
இவ் ஆலோசனை மாநாட்டின் தீர்மானங்களும், பரிந்துரைகளும் வருமாறு:
1. 2001ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போர்நிறுத்தத்திற்கு உயிர்கொடுக்கும் முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்.
2. முழு அளவிலான பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுவதற்கு ஏதுவாக தென்னாபிரிக்காவிற்கு அவர்கள் வருகை தருவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் அனுசரணை வழங்க வேண்டும்.
3. சிறீலங்காவின் சகல சமூகப் பிரிவுகளுடனும் தென்னாபிரிக்க அரசாங்கமும், தென்னாபிரிக்க தமிழ் சமூகமும் தொடர்பாடல்களைப் பேணுவதற்கான சூழல் ஏற்பட வேண்டும்.
4. பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் உதவி புரிய வேண்டும். ‘கைதிகள் பேச முடியாது’ என்பதை துணை அமைச்சர் படையாட்சி அவ்விடத்தில் நினைவூட்டினார்.
5. இராணுவ அமைப்பு என்ற நிலையிலிருந்து அரசியல் தீர்வைத் தேடும் அரசியல் கட்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் பரிணமிப்பதற்கு ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் போன்ற தென்னாபிரிக்க அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவி புரியும்.
6. ‘சமாதானத்திற்கும், பேச்சுவார்த்தைகளுக்குமான வரையறை’ பற்றி மேலதிக உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும்.
7. தென்னாபிரிக்கத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையைக் கண்டிறியும் குழுவொன்று சிறீலங்காவிற்குப் பயணம் செய்வதோடு, சகல இடங்களுக்கும் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
8. சிறீலங்காவின் சகல பகுதிகளுக்கும் மனிதநேய உதவிகள் சென்றடைவதற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும்.
9. சிறீலங்காவின் பிரச்சினை ஈற்றில் சிறீலங்கன் மக்களால் மட்டும் தீர்க்கப்படக்கூடியது.”
பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமான ரூட் ரவி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் மேற்கண்ட பகுதிகளை நாம் மேலோட்டமாகப் பார்த்தால் தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சாதகமான விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருப்பது போன்று தென்படுவது இயல்பானதே. அதுவும் வன்னி மக்களுக்கான மனிதநேய வழங்கல்களை முடக்கி, மடு தேவாலயப் பகுதியை முற்றுகைக்குள் வைத்து மிகப்பெரும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிங்களப் படைகள் முன்னெடுத்திருந்த பின்புலத்திலும், மடு தேவாலயம் மீதான சிங்களப் படைகளின் வலிந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நோர்வே ஊடாக அனைத்துலக சமூகத்தை வலியுறுத்தியும் பா.நடேசன் அவர்களால் பகிரங்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் போர்நிறுத்தம், தங்குதடையற்ற மனிதநேய வழங்கல் போன்றவை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை தென்னாபிரிக்க கொண்டிருப்பது போன்ற தொனியில் இவ் அறிக்கை தென்படுவது இயல்பானதே.
ஆனால் ரூட் ரவியின் அறிக்கையை நுனிப்புல் மேயும் ஆய்வுக்கு உட்படுத்தி மெய்மறந்து போவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராக இருக்கவில்லை. எதனையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் தமிழீழ விடுதலைப் புலிகள், ரூட் ரவியின் அறிக்கையையும் நுணுகி ஆராய்ந்தார்கள். இராணுவ அமைப்பு என்ற நிலையில் இருந்து அரசியல் கட்சி என்ற நிலைக்கு தமது இயக்கத்தை பரிணமிக்க வைப்பதற்கு தென்னாபிரிக்கா முற்படுவதாக ரூட் ரவி குறிப்பிட்டது பூடகமாகத் தமது இயக்கத்தின் ஆயுதக் களைவு பற்றியது என்பதைப் புரிந்து கொள்வது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை கடினமான ஒன்றாக இருக்கவில்லை. தவிர ‘சிறீலங்காவின் பிரச்சினை ஈற்றில் சிறீலங்கன் மக்களால் மட்டும் தீர்க்கப்படக்கூடியது’ என்று ரூட் ரவியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை சிங்கள மேலாதிக்கத்தையும், ஈழத்தீவு சிங்கள-பௌத்த மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற சிங்கள இனவாதத்தின் கூற்றையும் அங்கீகரிக்கும் வகையில் அமைந்திருந்ததையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அவதானிக்கத் தவறவில்லை.
ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமான ரூட் ரவி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை இவ்விடயங்களை மட்டும் பூடகமாக உள்ளடக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிவளங்களை அதிகரிப்பதற்கும், அனைத்துலக மட்டத்தில், அதுவும் மேற்குலக நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்குவதற்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கான சீனாவின் ஆயுத உதவிகளை முடக்குவதற்குமான கவர்ச்சிகரமான திட்டங்களையும் ரூட் ரவி அவர்கள் அனுப்பிய அறிக்கை கொண்டிருந்தது. ஆனால் இவற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை வேரறுப்பதற்கான வியூகங்கள் மிகவும் பூடகமான முறையில் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவற்றையும் தமிழீழ விடுதலைப் புலிகள் துல்லியமாக இனம் கண்டு கொண்டார்கள்.
(தொடரும்)
நன்றி: ஈழமுரசு
















