தமிழ் – முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்தாலே நிரந்தர அழிவில் இருந்து தப்பிக்கலாம்; கஜேந்திரன்

Selvarajah_Kajendranநிரந்தர அழிவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் தற்போதுள்ள சர்வதேச வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். எனவே தமிழ்- முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் தெரிவித்தார்.

அளுத்கம, பேருவள , தர்கா நகரில் வாழும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அதல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் மிக கொடூரமான இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். எனது குழந்தைப் பருவம் முதல் இளமைக்காலம் வரை இந்த சிங்கள பௌத்த பேரினவாத உயிர்ப்பலியில் இருந்து தப்பிக் கொள்வதற்கு எமது பெற்றோர்கள் எவ்வளவு தூரம் ஓடி அலைந்தார்கள் என்பதை அனுபவம் ஊடாக பார்த்திருக்கின்றோம்.

முன்னர் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை கட்டவிழ்த்து விட்டபோது முஸ்லிம் சகோதரர்களை எங்களுக்கு எதிராக சிங்கள அரசு பாவித்தது. எமக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றிவித்தது.

தனது கையில் அதிகாரங்களை வைத்துக்கொண்டு தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளை சீரழித்து எங்களை ஒருவருடன் ஒருவர் மோதவிட்டு தன்னுடைய இன அழிப்பு நாடகத்தை அரங்கேற்றினர்.

இவ்வாறான கால கட்டங்களில் தான் படுகொலைகளை இன அடக்குமுறையை தடுப்பதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய பரிணாமம் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் உருவாக்கம்

ஆனால் அந்த நியாயமான போராட்டத்தை பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி விடுதலைப்புலி பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று கூறி தமிழ் மக்களில் இலட்சக் கணக்கானவர்களை சிங்கள பௌத்த பேரினவாதம் அழித்தொழித்துள்ளது.

இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக அமைந்திருப்பது மகாவம்சம் என்ற புனை கதையே அதில் இலங்கை என்பது சிங்களவர்களுக்கானது என்று புத்தபிரானால் அருளப்பட்டது என்ற கற்பனா வாதத்தத்தைக் கொண்டு அது ஒரு விசமாக சிங்களவர்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விசம் சிறுவயதில் இருந்து ஊட்டப்படுவதன் விளைவாகத் தான் இந்த இனவாதம் இங்கு தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கின்றது.

பலமாக இருந்த தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து பின்னர் முதுகெலும்பை முறித்து விட்டு இப்போது முஸ்லிம் சகோதரர்கள் மீது கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

எனினும் பேருவளை வன்முறை வர்த்தகர்கத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மோதல் உருவாகவில்லை மாறாக சாதாரண மனித வாழ்வே வேண்டாம் என்று காவி கட்டிய இனவெறி பிடித்த பிக்குகள் தான் இந்த தாக்குதல்களை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இது சிங்கள பௌத்த இனவாதத்தின் ஒரு நிகழ்ச்சி நிரல் இதனை யாரும் மாற்றிவிட முடியாது. இதில் ஞானசார தேரரைக் கைது செய்வதனால் இவற்றுக்கு முடிவு கட்டிவிட முடியாது.

பொது பல சேனா உருவாக்கப்பட்ட போது நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்து ஆசியும் வழங்கி வைத்தார்.

எனவே அவ்வாறானதொரு அமைப்பு ஒரு சிலரின் சிந்தனையில் செயற்படுவது அல்ல. அரசின் சிந்தனையில் இருந்து செயற்படுகின்றது. இனவாத அடியூற்றில் இருந்து செயற்படுகின்றது. இதனை நாங்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் இலங்கை இன்று பூகோள அரசியலுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்றது. இன்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமக்கு கீழ் கொண்டுவர முனைகின்றது.

இதனை முஸ்லிம் சகோதரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் தரப்புடன் கைகோர்த்து நின்று சமூகத்தை சரியாக கையாண்டு தமிழ் முஸ்லீம் மக்களை சரியான முறையில் தமது உரிமையினை நிலைநாட்டு வகையில் ஒரு புதிய அரசு அமைப்பை உருவாக்க வேண்டும் .

நாம் நிரந்தர அழிவில் இருந்து தப்பிக் கொள்ள வேண்டுமாக இருந்தால் நிட்சயமாக இன்று உள்ள சர்வதேச சூழலைப்பயன்படுத்தி அரசுக்கு வால் பிடிக்கின்றவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி வந்து தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாகி சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் .

அத்துடன் முஸ்லிம் தலைவர்கள் தமது மக்களைப் பாதுகாக்க வெளியில் வரவேண்டும். தமிழர் மீதான அழிப்பு முள்ளிவாய்காலுடன் நிற்கவில்லை. எம்மை மீண்டும் அழிக்கவே பேரினவாதம் தொடர்ந்தும் காத்துக் கொண்டு இருக்கின்றது. இதில் கத்தோலிக்க சிங்களவர்களும் கூட இவர்களால் அழிக்கப்படுவார்கள் என்றார்.

Tags: , ,

Leave a Reply