சென்னையில் கணவர் ஐஸ்கிரீம் வாங்கித்தராததால் மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஊரப்பாக்கம் முத்துவேல்நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி ரேணுகா.
இவர்களுக்கு நித்தீஷ் என்ற 8 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது கணவரிடம் ரேணுகா ஐஸ்கிரீம் கேட்டுள்ளார். அதற்கு தாஸ் இந்த கிளைமேட்டில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உனக்கும் குழந்தைக்கும் சளி பிடிக்கும் என்று கூறி வாங்கி தர மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறினால் மனமுடைந்த ரேணுகா தனது உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
அவரை கணவர் தாஸ் மற்றும் அக்கம்பக்கத்தினம் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
















