எங்களை கொன்னுடாதே பணத்தை எடுத்துக்கோ: – கொள்ளையர்களிடம் கதறிய மூதாட்டி

ஈரோட்டில் தீரன் படப் பாணியில் ஒரு வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஓடைக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (41). திருமணமாகாத இவர் தாயார் தங்காயம்மாளுடன் வசித்து வருகிறார். நேற்று (மே 3) இரவு சுமார் 7 மணியளவில் இவர்களின் வீட்டுக் கதவு படபடவென அடிக்க, ஏதோ அருகிலிருக்கும் உறவினர்கள் தான் அழைக்கிறார்களோ என கதவைத் திறந்திருக்கிறார் தங்காயம்மாள். கதவைத் திறந்தவுடனேயே முகமூடி அணிந்த, வாட்டசாட்டமான 6 பேர் கையில் பெரிய பெரிய பட்டாக் கத்திகளை ஏந்தியபடி நின்றிருக்கின்றனர். இதனைப் பார்த்து பதறிப்போன தங்காயம்மாள் கத்த முயற்சிக்க, கொள்ளையர்கள் கழுத்தை நெறித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளனர். வீட்டின் வேறு அறையிலிருந்த கோபாலகிருஷ்ணன் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த போது தான், வீட்டினுள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ள தனது தாயாரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென முயற்சித்த கோபாலகிருஷ்ணனை, கொள்ளையர்கள் கத்தியால் தாக்கி நிலைகுலைய வைத்திருக்கின்றனர். மேலும், தாய் – மகன் இருவரையும் துணியால் கட்டிப்போட்டு, கிட்டத்தட்ட அரைமணி நேரம் வீட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு 7 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் நகையைக் கொள்ளையடித்துள்ளனர். இதுபோதாதென்று ஆளுக்கொரு பக்கமாக, இன்னும் ஏதாவது கிடைக்குமா எனச் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். வேறு ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் 6 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, கார் மூலமாகச் சிட்டாக பறந்துள்ளனர்.

கொள்ளைஇச்சம்பவம் குறித்து தங்காயம்மாளிடம் பேசினோம். “ஒரு 6 பேர் இருக்கும். திபுதிபுன்னு வீட்டுக்குள்ள நுழைஞ்சி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. கையில பெரிய கத்தி வச்சிருந்தாங்க. என்கிட்ட பீரோ சாவி கேக்க, நான் கொடுத்துட்டு ‘இந்த பணத்தையும் நகையும் எடுத்துக்குங்க, எங்களை கொன்னுடாதீங்க’ என அழுதேன். அதுக்கப்புறம் எங்களை கட்டிப்போட்டுட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாங்க” என விரக்தி குறையாமல் பேசினார்.

கொள்ளையர்கள் கத்தியை பின்பக்கமாகத் திருப்பி தாக்கியதால், கோபாலகிருஷ்ணனுக்கு பெரிதளவு வெட்டுக்காயங்கள் இல்லை. கை, கழுத்து, முதுகுப்பகுதிகளில் மட்டும் சில காயங்கள் இருந்ததால், ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், இந்தி கலந்த தமிழில் பேசியிருக்கின்றனர். எனவே, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் வடமாநிலத்தவர்கள் தான் என்பது உறுதியாகியிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!