ஐ.நாவில் சாட்சியமளிப்போருக்கு பாதுகாப்பு உத்தரவாதம்!!

tnalogo2ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கும் தமிழர்களுக்குரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தமக்கு உறுதியளித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பினருடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே ஐ.நா. விசாரணையில் சாட்சியமளிக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணையின் போது, இலங்கை அரசாலும், அதன் இராணுவத்தினராலும் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராகவுள்ளனர். ஆயினும் இலங்கை அரசு, ஐ.நா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளதுடன், சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல, சாட்சியமளிப்பவர்கள் எதிரிகளாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தது. நேற்றைய சந்திப்பிலும் இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் தெரிவித்திருந்தது. அதற்குப் பதிலளித்த ஐ.நா உதவிச் செயலர், சாட்சியமளிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply