கனேடிய அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தடையாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்த வலயத்தில் இராணுவத்தின் பிரசன்னம் பிரதேசத்தில் வாழும் பெண்கள் சிறுமிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கனடா சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கனடா இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் சொற்பளவானது என தெரிவித்துள்ளது.
2007ம் ஆண்டு முதல் 2009;ம் ஆண்டு வரையில் வடக்கில், ஐந்து பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஏழு படையினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதியில் மொத்தமாக 125 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆறு பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 படைவீரர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வட மாகாணத்தில் மொத்தமாக 307 பேருக்கு எதிராக 256 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இராணுவ சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
படையினர் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
















