பணியாட்சி இறுக்கப்பிடியிலிருந்து அமைச்சர் குருகுலராஜா விடுபடுவாரா?
வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையிலிருந்து வடக்கு தனியாக பிரிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையை கைப்பற்றிக் கொண்டது. அன்றிலிருந்து பல்வேறு எதிர்பார்ப்புக்கள் இந்த சபையிடம் உள்ளது. இந்த சபை வடமாகாண மக்களின் இருப்புக்கும் சுய பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் மேம்பாட்டுக்கும் உரிய பொருத்தமான உபாயங்களைக் கொண்டு இயங்கும் என்ற புலக்காட்சி வலுவாக உள்ளது.
ஆனால் தற்போதைய வடக்கு நிலைமைகள், அரசியல் நடைமுறைகள், மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் யாவும் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் மாறாகவே அமைந்து வருகின்றது. மக்களின் சுயத்துவத்தை சுயமரியாதையை வளர்ப்பதில் பாதுகாப்பதில் மாகாணசபை இன்னும் பலதூரம் பயணஞ் செய்ய வேண்டியுள்ளது.
தற்போது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சராக வந்திருப்பவர் முன்பு கிளிநொச்சியில் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்தவர். இவர் கல்விப் புலத்துடன் நேரடித் தொடர்பும் அனுபவமும் கொண்டவர். இவரிடம் நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு.
காலனித்துவ ஆட்சியின் விளைவாக தோற்றமும் வளர்ச்சியும் பெற்ற பாடசாலைகளும் கல்வி நிர்வாக முறைமையும் இறுகிய பணியாட்சிப் பண்புகளை உள்ளடக்கியவாறே இன்றும் தொழிற்பட்ட வண்ணமுள்ளன. இந்த நடைமுறைக்குள் நின்று இயங்கியவர் தான் நமது கல்வியமைச்சர். இவர் பணியாட்சி இறுக்க மனப்பான்மையிலிருந்து இன்னும் விடுபடமுடியாதவர். பணியாட்சியின் பண்புகளை திறனாய்வின்றி உள்வாங்கியவர். அதற்குள்ளிருந்துதான் தனக்கான தற்படிமத்தை வளர்த்துக் கொண்டவர். ஆகவே நாம் இந்த அமைச்சரிடமிருந்து உருப்படியான மாற்றங்களை எதிர்பார்க்க முடியுமா? அல்லது அமைச்சரால்தான் நிலவும் பணியாட்சி இறுக்கப் பிடியிலிருந்து விடுபட்டு மாற்று ரீதியில் சிந்தித்து மாற்றங்களை உருவாக்கத்தான் முடியுமா? இவை குறித்து நாம் இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பல்வேறு விமரிசனங்களையும் எழுப்ப வேண்டும். இதற்கான தருணமும் இதுதான்.
கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்களே நிர்வாகிகளைக் காட்டிலும் கூடிய பங்குடையவர்கள். ஆசிரியர்களுக்குரிய புலமைச் சுதந்திரத்திற்குரிய மதிப்பும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவற்றை கல்வி நிர்வாகிகள் ஏனோ மறுத்து வருகின்றனர். இது ஒரு பொதுவான நடைமுறையாகவும் உள்ளது. இது வடக்குக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பொதுவானதுதான்.
தற்போது வடமாகாண கல்வி அமைச்சு ஏற்பாட்டில் நடைபெற்ற ஆய்வரங்குச் செயற்திட்டம் ஆசிரியர்களுக்குரிய புலமைச் சுதந்திரத்தை அங்கீகரிக்கவில்லை, மதிக்கவில்லை. வடக்கு கல்வி நிர்வாகத்தின் தனித்துவமும் புலமைப் பண்புகளும் பணியாட்சி முறைமையின் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தன. இந்த நடைமுறைகளின் ஆதிக்கம் கருத்தியல் ரீதியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது.
நடைமுறையிலே பணியாட்சி பல்வேறு எதிர்மறைப் பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை நாம் இங்கு தொகுத்துக் கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும். நமது எதிர்காலவியல் நோக்கில நாம் நுட்பமாகவும் ஆழமாகவும் சிந்திப்பதற்கான வாயில்களையும் இது நிச்சயம் திறந்துவிடும். நமக்கு மாற்றுப் பண்பாடு நோக்கிய கவனக் குவிப்பு முக்கியம். பணியாட்சி முறைமை சார்ந்த கருத்தியற் பின்புலத்தை விளக்குவதும் பயனுடையதாக இருக்கும். புறவயமான அணுகுமுறைகளும் கராறான செயற்பாடுகளும், மானிட நேயத்தை புறந்தள்ளி விடுகின்றது. இதனால் தான் பணியாட்சி முறைமை கல்வி நிர்வாகத்துக்கு ஒவ்வாதது என்ற கருத்தும் முன்மொழியப்படுகின்றது. பணியாட்சி அமைப்பு பொருத்தமான உட்கூறுகளையும் அலகுகளையும் துணை அலகுகளையும் கொண்டு இயக்கப்படுகின்றது. இவ்வேளை இவற்றிற்கிடையே நேரிய இறுகிய ஒன்றிணைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.
முற்போக்கான கலைத்திட்ட மாற்றங்கள் பல நடைமுறையிலே தோல்வியடைவதற்கும் கல்வி நிர்வாகத்திலே காணப்படும் பணியாட்சி இறுக்கமே காரணமாகின்றது. இந்த நடைமுறை வடமாகாண கல்வி நிர்வாகக் கட்டமைப்பிலும் இழையோடி வருகின்றது. இங்கு சிறிய ஒரு பணியையேனும் எளிதிலே செய்து முடித்துவிட முடியாத அளவுக்கு ஒழுங்கு விதிகளும் சட்டங்களும் சிக்கலாக்கப்பட்டிருக்கின்றது. மிகுதியான காகித வேலைகளும் தேவையற்ற விளக்கங்களைத் திரட்டும் நிர்ப்பந்தங்களும் மேலெழுந்துள்ளன. இறுகிய செயல்விதிகள், சட்டங்கள் ஆரோக்கியமான பொருத்தமான ஆக்க நிலைச் செயற்பாடுகளின் வினையாற்றலை வீழ்ச்சியடையச் செய்துவிடுகின்றன.
பழைய இறுகிய சட்ட வரையறைகள் பயன்மிக்க புதுமைகளை உட்புகுத்துவதற்குத் தடையாக உள்ளன. தொடர்ந்து பிரச்சினைகளையும் மனிதப் பண்புகளையும் இறுகிய நிலையிலும் இயந்திரப் பாங்கான நிலையிலும் கையாளும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. கற்பித்தல் செயற்பாட்டிலிருந்து நிர்வாகச் செயற்பாட்டிற்கு மாறும் பலர் அந்தக் கணமே ஆசிரியத்துவத்தின் பண்புகளை துறந்து மறந்து அதிகாரத் தோரணையில் இயங்கும் பலரைக் கண்டு வருகின்றோம். நடப்பியல் சார்ந்த பணியாட்சி முறைமையை திறனாய்வு ரீதியில் புரிந்துகொண்டு செயலாற்றும் ஒருவரால்தான் பொருத்தமான மாற்றங்களையும் திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும். இதற்கு நமது கல்வியமைச்சர் தயாராக உள்ளாரா? அல்லது அதற்கான மனப்பாங்கை வளர்த்துக் கொண்டுள்ளாரா?
பொதுவாக அரச பணியாட்சி முறைமை பயனுள்ள நடப்பியல் சார்ந்த செயற்பாடுகளைக் காட்டிலும் முன்னைய மாற்றங்களை அடியொற்றிய சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இலங்கையில் செல்வாக்கு பெற்றுள்ள இனத்துவ அரசியல் ஆதிக்கமும் அரச பணியாட்சி முறைமையுடன் இணையும் பொழுது ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் பற்றிய தெளிவும் விளக்கமும் நமக்கு இன்னும் விரிவுபெற வேண்டும். இதில் வடமாகாண மடக்கள் பிரதிநிதிகளுக்கு இன்னும் கூடுதல் அறிவும் விளக்கமும் வேண்டும்.
கல்வியாளர்,
-தெ.மதுசூதனன்-
















