பாலா படத்தின் நாயகி வாய்ப்பு, கன்னடத்தில் ரவிச்சந்திரன் – சுதீப் கூட்டணியுடன் நடித்த “மாணிக்யா’ படம் ஹிட் என இரட்டை உற்சாகத்தில் இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
“”தமிழ் சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் எல்லா நடிகைகளுக்குமே, பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் கனவு இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. பாலாவின் படத்தில் நடிப்பது, நடிப்பு சம்பந்தமான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வது போன்றது. பாலா போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். ரொம்ப சந்தோஷமா இருக்கு” – பாலாவின் “தாரை தப்பட்டை’ படத்தில் நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை இன்னமும் அவரால் நம்ப முடியவில்லை.
மேற்கத்திய நடனத்தில் தேர்ச்சி பெற்ற உங்களால், தமிழரின் பாரம்பரிய நடனமான கரகாட்டம் ஆடுவது சவாலாக இருக்கிறதா?
நடனம் என்பது மனதின் இசை. மனதில் உள்ள ரிதத்தைத்தான் உடல்மொழியாக நடனத்தில் வெளிப்படுத்துகிறோம். ஒருவகை நடனத்தை ஆடத் தெரிந்த ஒருவரால், இன்னொரு வகை நடனத்தையும் எளிதாக ஆட முடியும். சல்ஸô நடனத்தில் தேர்ச்சி பெற்ற என்னால் கரகாட்டத்தையும் இலகுவாக ஆட முடியும். இருந்தாலும், நேர்த்திக்காக கரகாட்டத்தை சில மாதங்கள் பயின்றேன்.
“தாரை தப்பட்டை’ எப்படிப்பட்ட படம்?
கரகாட்டத்தை மையப்படுத்திய படம். இதற்கு மேல் சொல்வதற்கு நான் அனுமதிக்கப்படவில்லை.
இயக்குநர் பாலாவின் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
“சேது’ படம் வெளிவந்தபோது நான் சிறுமி. அப்போதே அந்தப் படத்தைப் பார்த்து அதிசயித்தேன். பாலாவின் எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும். ஆனால், “பிதாமகன்’ படம் மனதுக்கு நெருக்கமானது. நான் நடிக்கும் படம் என்பதால் “தாரை தப்பட்டை’ இன்னும் நெருக்கமாக இருக்கிறது.
விஷாலுடன் உங்களை இணைத்து வரும் கிசுகிசுக்கள் சலித்து விட்டதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தீர்களே…
ஒருமுறை, இருமுறை என்றால் பதில் சொல்லலாம். நான் நடிக்க வந்த நாளில் இருந்தே விஷாலுடன் இணைத்து வரும் கிசுகிசுக்கள் உண்மையிலே சலித்து விட்டன. வேறு யாருடனாவது இணைத்து கிசுகிசு கிளப்புங்க பாஸ்.
விஷால்?
கிட்டத்தட்ட நான் பிறந்ததில் இருந்தே என் உயிர் நண்பன். என்னை எல்லா விதங்களிலும் புரிந்து கொண்டவன். என் குடும்பத்தில் அவனும் ஒரு அங்கம். அவனுடன் எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள என்னால் முடியும்.
லட்சுமி மேனனைக் காதலிக்கிறாரா விஷால்?
அது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு விஷயம். தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ஜோடியாக நடித்தாலே காதல் எனக் கதைகட்டி விடுவார்கள். விஷாலும், லட்சுமியும் இரண்டு படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். கேட்கவா வேண்டும்?
அப்படி என்றால் விஷால் – லட்சுமி மேனன் காதல் கதை வெறும் விளம்பர ஸ்டண்டா?
அதை நீங்கள் விஷாலிடம்தான் கேட்க வேண்டும்.
சிம்பு?
என் முதல் படத்தின் ஹீரோ. முதல் படம் மீதும், அதன் ஹீரோ மீதும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். சிம்பு எனக்கு அப்படித்தான். பெரிதாகப் பேசிக்கொள்வதில்லை என்றாலும், என் நெருங்கிய நண்பர்களில் சிம்புவும் ஒருவர்.
தமிழில் உங்களுடைய இரண்டாவது படமான “மத கஜ ராஜா’ இன்னும் வெளியாகவில்லையே…
இந்தக் கேள்வியை ஜெமினி பிலிம்ஸிடம்தான் கேட்க வேண்டும். படத்தில் எனது பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளேன். அந்த மனதிருப்தி எனக்குப் போதும்.
அப்பாவைப் போல உங்களையும் அரசியலில் எதிர்பார்க்கலாமா?
அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. எக்காலத்திலும் அரசியலில் ஈடுபட மாட்டேன். நடிகையாக இருப்பேன், முடியாவிட்டால் டான்சராக இருப்பேன்.
அப்பாவுடன் அரசியல் பேசுவீர்களா?
அரசியலைத் தவிர்த்து அப்பாவுடன் பேச நிறைய விஷயங்கள் உண்டு. நாங்கள் அரசியல் பேசுவது இல்லை.
நடிப்பு ஆசை சிறுவயது முதலே இருந்ததா?
இல்லை. தடய அறிவியல் படிப்பதுதான் என் கனவாக இருந்தது. அதன் ஒரு அங்கமாகத்தான் மைக்ரோ பயாலஜி படித்தேன். நடனம்தான் சிறுவயது முதலே என் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது. பொழுதுபோக்கிற்காக ஹிந்தி நடிகர் அனுபம் கெர் நடத்தும் நடிப்புப் பள்ளியில் படிக்கும் போதுதான் நடனத்தைத் தாண்டி நடிக்கும் ஆசை வந்தது. அங்கு படிக்கும் நாட்களில்தான் திறமை இருந்தாலும் உள்ளார்ந்த ஆசை இருந்தால்தான் நடிக்க முடியும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
நீங்கள் கன்னடத்தில் சுதீப்புடன் நடித்த “மாணிக்யா’ சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறதே…
தெலுங்கில் பிரபாஸ் நடித்து மெஹா ஹிட்டான “மிர்ச்சி’ படத்தின் ரீ மேக்தான் “மாணிக்யா’. தெலுங்கில் அனுஷ்கா நடித்த வேஷத்தில் நான் நடித்திருந்தேன். கன்னட சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான மெஹா ஹிட் படமாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்தின் மூலம் சுதீப் என் நெருங்கிய நண்பராகி விட்டார். அந்த வகையில் பெங்களூர் வந்தால் ஊர்சுற்ற ஒரு நண்பர் ரெடி.
















