மன்னார் மண்ணையும் மக்களையும் ரணகளப்படுத்தும் ரணசிங்க!

mannar-hospitalமன்னார் மாவட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றி வரும் வைத்தியகலாநிதி ரணசிங்கவின் பணி மற்றும் நடத்தைகள் தொடர்பில், மன்னார் மாவட்ட மக்கள் அதிருப்தியும் வெறுப்பும் விசனமும் அடைந்துள்ள நிலையில், அவருக்கு இடமாற்றத்தை வழங்கி மக்கள் தேவையறிந்து பொதுநலச்சேவையாற்ற கூடிய குணநலன்களை உடைய வைத்திய அதிகாரி ஒருவரை, தமது மாவட்டத்துக்கு நியமிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் மாவட்ட மக்கள் வலியுறுத்தியே வந்தனர். தமது வலுவான கோரிக்கையில் இப்போதும் அந்த மக்கள் கடுகளவேனும் விட்டுக்கொடுப்பின்றியே உள்ளனர்.

ஏன்? எதற்காக?

குற்றம் ஒன்று:

தலைமன்னார் பொது வைத்தியசாலையிலுள்ள பழைய மகப்பேற்று விடுதி (பிரசவ விடுதி) உடைந்து சிதைந்து பாழடைந்து பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், ஐந்து வருடங்களுக்கு முன்னரே புதிய மகப்பேற்று விடுதி கட்டப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

புதிய மகப்பேற்று விடுதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட போதும், முன்னைய கட்டடத்துக்குள் (பாழடைந்த பழைய விடுதிக்குள்) தான், கடந்த ஐந்து வருடங்களாக (2009ம் வருடத்திலிருந்து) கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிகிச்சைகள் நடைபெறுகின்றன. குழந்தைகள் பிரசவிக்கப்படுகின்றன.

மாறாக, சுகாதாரமான சுவாத்தியமான பாதுகாப்பான புதிய மகப்பேற்று விடுதியை, கடந்த 2009ம் வருடத்திலிருந்து தனது குடும்பத்தினரின் வசிப்பிடமாக ரணசிங்க பயன்படுத்தி வருகின்றார்.

குற்றம் இரண்டு:

கர்ப்பிணி பெண்களுடனும், தாய் சேய் கிளினிக்குக்கு வரும் பெண்களுடனும் பாலியல் இச்சைகள், தீண்டல்கள் என்று முறைகேடாக நடந்து கொள்ளல்.

குற்றம் மூன்று:

விசக்கடி, தீ மற்றும் வீதி விபத்து, உயர் குருதி அமுக்கம் (Pressure), நஞ்சருந்தியமை, மயக்கம், வலிப்பு, இப்படி உயிர் வாழ்தலுக்கு உத்தரவாதமற்ற ஏதேனும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்டு உயிரைக்காக்க போராடிக்கொண்டிருப்பவர்களை, ஏற்றி வரும் வாகனங்கள் பிற்பகல் 12.00 மணிக்கு பின்னர், பொது வைத்தியசாலை வளாகத்துக்குள் நேரடியாக உட்பிரவேசிக்க தடை விதித்துள்ளமை.

வாகனத்துக்குள்ளே உயிர் காக்க போராடியவாறு இருப்பவர் பற்றிய தகவல்களை, பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் காவலாளியிடம் முதலில் கூற வேண்டும். காவலாளி அத்தகவலை பிறிதொரு ஊழியரிடம் தெரிவிக்க, அவ்வூழியர் அதை வைத்தியரிடம் தெரிவித்து, அவரது அனுமதியைப்பெற்று, காவலாளிக்கு “அனுமதிக்கவும்” என்று தகவல் கொடுக்கப்பட்ட பின்னரே வாகனங்கள் உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

ரணசிங்கவின் மனிதாபிமானமற்றதும், வைத்திய சேவைக்கு ஏற்புடையதற்றதுமான குறித்த நடைமுறையால் அநாவசிய உயிரிழப்புகள் பலவும் சம்பவித்துள்ளன. சம்பவித்து கொண்டிருக்கின்றன.

குற்றம் நான்கு:

24 மணித்தியாலங்களும் வைத்தியசாலை தேவையை பூர்த்தி செய்வதற்காக, வைத்தியசாலைக்குள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டிய நோயாளர் காவு வண்டியை (Ambulance) தனது தனிப்பட்ட விடையங்களுக்காக, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தேவைகளுக்காக பயன்படுத்தி வருதல்.

இவ்வாறு பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், யாராவது நோயாளர்கள் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அந்த நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் தேவைப்பட்டால் மன்னார், பேசாலை வைத்தியசாலைகளுக்கும், வெளி மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் அந்த நோயாளர்களை முச்சக்கரவண்டி, மீன் வண்டிகளில் (Fish Cooler Van) கொண்டு செல்லுமாறு அவர்களின் உறவினர்களை பணித்தல்.

ரணசிங்கவின் இந்த அரச வள பொருள்கள் பயன்பாட்டு துஸ்பிரயோகத்தால் அநாவசிய உயிரிழப்புகள், பயணத்தூர அலைக்கழிப்புகள், வீண் ப(ய)ணச்செலவுகள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.

குற்றம் ஐந்து:

வைத்தியசாலைக்குள்ளே ஏதேச்சையாக குழந்தைகள், சிறுவர்கள் சிறுநீர் மலம் கழித்து விட்டால் போதும், அவர்களின் தாய்மாரை கடும் வார்த்தை பிரயோகங்களால் திட்டி ஏசி அவமானப்படுத்துதல். தனக்கு எதிராக யாராவது கிளர்ந்தெழுந்தால், கடற்படையினருடனும், இராணுவ புலனாய்வாளர்களுடனும் உள்ள நட்புறவை, செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டுதல் அன்றி, தாக்குதல் தொடுத்தல்.

குற்றம் ஆறு:

வைத்தியசாலைக்கு புதிதாக வரும் நோயாளிகளை வார்ட்டுக்குள் அனுமதித்தல் (தங்க வைத்து சிகிச்சை அளித்தல்), மேலதிக சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்புதல் போன்றவற்றில் பாரபட்சம், முறைகேடுகள் என்று, இவர் மீது இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு.

அடம்பிடிக்கும் ரணசிங்க!

தமக்கு தெரிந்த அரச உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தமை, முறைப்பாட்டு கடிதங்கள் எழுதியமை, ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தமை என்று இடையறாத மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் பயனாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சிலிருந்து கடந்த 16.06.2014 அன்று ரணசிங்கவுக்கு இடமாற்ற கட்டளை (Transfer Order) வழங்கப்பட்டும், பணி இடம் மாற்றலாகி போகமாட்டேன் என்று ரணசிங்க அடம் பிடித்து வருகின்றார்.

ரணசிங்கவின் கடமைகளை பொறுப்பேற்க, புதிதாக இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், (தலைமன்னாருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்) அவர்களுக்கு தனது பதவி நிலையையும், பணி நிலை இடத்தையும் (அலுவலகத்தை) கையளிக்க மாட்டேன் என்று ரணசிங்க முரண்டு பிடித்து வருகின்றார்.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, தன்னை இடமாற்றலாகி போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறிக்கொண்டு பொறுப்புகளை கையளிக்க மறுத்து வரும் ரணசிங்கவிடம், ஆளுநர் அவ்வாறு கூறியதற்கான எழுத்து மூலமான எவ்வித ஆதாரங்களும் இல்லை.

அச்சுறுத்தும் ரணசிங்க!

இந்நிலையில், புதிய வைத்தியர்களிடம் பொறுப்புகளை கையளிக்காமல் மருத்துவ சேவையை தன் அகோரப்பிடிக்குள் வைத்திருக்கும் ரணசிங்கவின் ஏதேச்சதிகார செயலை கண்டித்து, கடந்த 20.06.2014 அன்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவும், மக்களும் இணைந்து, பொது வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி மகஜர்கள் கையளிக்க திரண்ட போது, ரணசிங்கவின் ஏவலின் பெயரால் கடற்படையினரும், இராணுவ புலனாய்வாளர்களும் மக்களை கடுமையாக எச்சரித்ததன் விளைவாக மக்கள் கூட்டம் களைந்து சென்றதால் ஆர்ப்பாட்டத்தை நடத்த முடியாமல் போயிற்று.

பேய் போனாலும் பிசாசுகள் உண்டு!

அரச உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தமை, முறைப்பாட்டு கடிதங்கள் எழுதியமை, ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தமை என்று இடையறாத மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் பயனாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சிலிருந்து கடந்த 16.06.2014 அன்று ரணசிங்கவுக்கு இடமாற்ற கட்டளை (Transfer Order) வழங்கப்பட்டு விட்டது.

இது, கர்ப்பிணி பெண்களுடனும், தாய் சேய் கிளினிக்குக்கு வரும் பெண்களுடனும் பாலியல் இச்சைகள், தீண்டல்கள் என்று முறைகேடாக நடந்து கொள்ளும் ரணசிங்கவை, தமது மாவட்டத்திலிருந்தே துரத்தி அடிப்போம் என்று சபதம் எடுத்துக்கொண்ட தாய்குலத்துக்கும், அவரால் பாதிக்கப்பட்ட, மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஆனால் “மக்களின் கைக்கு எட்டியதை அவர்களின் வாய்க்கு எட்ட விடாமல்” அதாவது, மக்கள் தம் தொடர் போராட்டத்தின் பலனாக தம் கைகளுக்குள் பறித்து விட்ட வெற்றிக்கனியை சுவைக்க விடாமல், தடுத்து நிறுத்தியிருக்கிறார் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம்.

“கள்ள உறவு” அறுந்து விடுமோ? – அஞ்சும் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சிலிருந்து இடமாற்ற கட்டளை (Transfer Order) கிடைக்கப்பெற்றதும், ரணசிங்கவை வழியனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக்கு உண்டு.

ஆனால் தனக்குள்ள அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வாறு ஒரு நடவடிக்கையை தான் மேற்கொண்டு விட்டால், ஆளுநருக்கும் தனக்கும் இடையிலான “கள்ள உறவில் விரிசல் விழுந்து விடுமோ, இல்லையேல் அந்த உறவு முற்றாக அறுந்து தொலைந்து விடுமோ?” என்று அஞ்சி, ரணசிங்க மீது சட்டத்தில் உள்ள நடவடிக்கையை மேற்கொள்ளும் விடையத்தில் “கழுவுற மீனில நழுவுற மீனாக” இருந்து வருகின்றார் அமைச்சர் ப.சத்தியலிங்கம்.

அட! அவர் இல்லையா இவர்?

வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சராக சத்தியலிங்கம் பதவி ஏற்கும் போது, வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வந்த, முள்ளிவாய்க்காலில் மருத்துவ உதவிகள் ஆபத்தான காலகட்டத்தில் மகத்தான மருத்துவ பணியை ஆற்றியமைக்காக, ஐ.நாவினால் உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட வைத்தியர் சத்தியமூர்த்திக்கு, மத்திய அரசினால் வழங்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் ரீதியிலான இடமாற்ற கட்டளையை (Transfer Order) மிகத்தீவிரமாக செயல்படுத்தி, அவரை தமிழ் மண்ணை விட்டே கொழும்புக்கு குடிபெயரச்செய்வதில் காட்டிய வேகத்தை, ரணசிங்க மீது அமைச்சர் ப.சத்தியலிங்கம் செயல்படுத்த காணோம்.

முற்றுகை வலயத்துக்குள் மருத்துவ உதவிகள் ஆபத்தான காலகட்டத்தில், வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களின் மனிதாபிமான சேவையை, மருத்துவ பணியை, செவி வழிக்கதைகளாக அறிந்திருந்த அவரது முகம் அறியா பெரும்பாலான மக்கள், சத்தியமூர்த்தி தான் சத்தியலிங்கம் என்று நினைத்து அதிகப்படியான வாக்குகளை அள்ளி இறைத்து விட்டு, தேர்தல் முடிவுக்கு பின்னர் அட! அவர் இல்லையா இவர்? என்று புலம்பிய சோகம் எல்லோருக்கும் தெரிந்ததே.

இத்தகைய மக்கள் ஆதரவை அன்பை நேசிப்பை பெற்ற ஒருவரை, மக்கள் அலை அரசியலுக்கு இழுத்து வந்து விட்டால், தனது அரசியல் இருப்புக்கு நாளை அவர் பெரும் சவாலாக உருவாகி விடுவாரோ? எனும் மனக்குடைச்சல் காரணமாக, சத்தியலிங்கம் அமைச்சராக பொறுப்பேற்றதும் செய்த முதல் வேலை என்னவென்றால், மத்திய அரசினால் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்டிருந்த அரசியல் பழிவாங்கல் ரீதியிலான இடமாற்ற கட்டளையை (Transfer Order) மிகத்தீவிரமாக செயல்படுத்தி, அவரை தமிழ் மண்ணை விட்டே கொழும்புக்கு குடிபெயரச்செய்தது தான்!

பொலிஸ் அதிகாரம் இல்லை, காணி அதிகாரம் இல்லை என்று புலம்பும் இவர்கள், கிடைத்திருக்கின்ற அதிகாரத்தை முறையாக பயன்படுத்துவதில்லை. அதனை மக்கள் நலனுக்காக செப்பனே செயல்படுத்துவதில்லை. யார் யாரையோ எல்லாம் திருப்திபடுத்துவதற்காக இன்றுள்ள அதிகாரத்தையும் துஸ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்பதற்கு ரணசிங்கவின் விவகாரம் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-

Tags: , ,

Leave a Reply