உணர்வுகளை உரசுகிறதா சிங்கள படம்?

with-you-without-you’ஒப நதுவ ஒப எக்க’ ( With you With out you..!) – என்ற சிங்கள திரைப்படம் இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் பிரசன்ன விதநாகே இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது. இது, சமீபத்தில் சென்னையில் திரையிடப்பட்ட நிலையில், இந்தத் திரைப்படம் இலங்கை தமிழர்களை புண்படுத்துகிறது. படத்தை திரையிடக் கூடாது என்று மிரட்டல் போன்கள் வரவே, படத்தை நிறுத்திவிட்டனர்!

சரி, இந்த 90 நிமிட திரைப்படத்தில் தமிழரின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் அப்படி என்னதான் இருக்கிறது? படத்தைப் பார்த்தால்தானே புரியும்?

படத்தைக் கவனமாகப் பாருங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்… என்றபடி தமிழ்த் திரைத்துறையினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஜூன்24 அன்று படத்தை போட்டுக் காட்டினார், அதன் இயக்குநர் பிரசன்ன விதநாகே!

சிங்கள ராணுவத்தில் இருக்கும் சிங்கள இளைஞன், தமிழர்களுக்கு எதிராக நடந்த பேரழிப்பு யுத்தத்தின் போது, குற்றவுணர்வு காரணமாக கொலைப் பணிகளை தொடர முடியாமல் ராணுவத்திலிருந்தே விலகுகிறான். பிறகு, நகை அடகுக்கடை வைத்துப் பிழைப்பு நடத்துகிறான். போரில் குடும்பத்தையே இழந்த தமிழ்ப் பெண் ஒருத்தியை காதலித்து திருமணம் செய்கிறான், சிங்கள ராணுவ வீரனாக இருந்ததை மறைத்து!

காதல் கணவன் மேல் அளவு கடந்த அன்பு வைத்து வாழ்க்கையை நகர்த்துகிறாள் அந்தப் பெண். வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், கணவனின் நண்பன் ஒருவன் மூலமாக, ராணுவத்தில் பணியாற்றியவன் எனத் தெரிய வர துடிதுடித்துப் போகிறாள். இருவரிடையே கடும் வாக்குவாதம் வெடிக்கிறது. போரில் என்னுடைய தம்பிகள் இருவரும் கொல்லப்பட்டனர். அதற்கு நீயும் காரணம் என்று வெடித்து அழுகிறாள் அவள். சட்டென்று மனைவியின் (தமிழ்ப்பெண்னின்) பாதங்களைப் பிடித்து மன்னிப்பு கேட்கிறான் அவன். நான் யாரையும் கொல்லவில்லை. என்னுடைய நண்பர்கள் சிலர் இப்படி செய்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறான். அவளும் கணவனை மார்போடு அணைத்து, அவனுடைய முழு அன்பையும் காதலையும் புரிந்து கொள்கிறாள். ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்கொலை செய்து கொள்கிறாள் அந்தப் பெண்.

என்னதான் கணவன் நல்லவனாக இருந்தாலும், தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள ராணுவத்தில் பணியாற்றிய ஒருவனுடன் வாழ்வது சரியா என்கிற குற்றஉணர்வே அவளைக் கொன்றுவிடுவதாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ளாமலிருந்தால், சந்தோஷமாக வாழ்ந்திருப்பாயே என்றபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான் கணவன்.

இந்தத் திரைக்கதையின் மூலமாக தமிழர்-சிங்களவர்களிடையே நடந்த போருக்குப் பிந்தைய நிலையை அழகியலோடு சொல்லியிருக்கிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

படம் முடிந்த நிலையில், சிங்கள இயக்குநரிடம் கேள்விகளை முன் வைக்க ஆரம்பித்தனர். பரபரப்பாக இதுபோய்க் கொண்டிருக்க… திடீரென ஆவேச பேச்சுக்கள் எட்டிப் பார்க்க…. ஏதோ மோதல் வெடிக்கப் போகிறது எனும் நிலையில், போலீஸ் வந்து சேர்ந்தது.!

படத்தைப் பற்றிய செய்தி இவ்வளவுதான். இந்தப் படத்தை எதற்காக எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் உங்களிடம் இருந்தால்… தாராளாமாக இங்கே பதிவு செய்யுங்களேன்!

https://www.facebook.com/ntamilcom

பொன்.விமலா

Tags: ,

Leave a Reply