தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கப்பல் மூலமாக ஆயுதம் கடத்தியவர் எனவும், அந்தக் கப்பல்களுக்கு கப்டனாக செயற்பட்டவர் எனவும் குற்றவாளியாக இனங்காணப்பட்டு வவுனியா நீதிமன்றினால் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, தற்போது கனடாவில் வசிக்கும் கனகராஜா ரவிசங்கரை கைது செய்ய இன்ரர்போலின் உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
சிவப்பு அபாய பட்டியலில் இவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே இவரைக் கைது செய்வதற்கு இலங்கை அரசு தீவிர முயற்சி எடுத்து வருகின்றது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரவிசங்கர் 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டார் என்றும் 1996, 97 மற்றும் 99 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் புலிகளுக்கு கப்பல்கள் மூலமாக ஆயுதங்களை கடத்தி வழங்கியிருந்தார் என்றும் கூறப்படுகின்றது. இலங்கையிலிருந்து 2005 ஆம் ஆண்டே இவர் தப்பிச் சென்றார் எனவும் இவர் மீது வவுனியா நீதிமன்றில் தொடர்ந்த வழக்கிற்காகவே 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
















