சினிமா பாணியில் காதலன் கண் முன் காதலியை கடத்திய கும்பல்

kids-jaffnaநெல்லை அருகே, அரசு பேருந்தை வழிமறித்து, காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. இதனை தடுக்க முயன்ற அவரது காதலன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பெண் துணை ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராதாபுரம் அருகே ஆவரைகுளம் அம்பலவாணபுரத்தை சேர்ந்த ராஜதுரை மகன் சங்கர்(26). ஆரல்வாய்மொழியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், குமரி மாவட்டம் ராமபுரம் அருகே குலசேகரன்புதூரை சேர்ந்த இசக்கியப்பன் மகள் கங்கா(21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

கங்காவும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கங்காவின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும், நண்பர்கள் உதவியுடன் இடலாக்குடி பதிவு அலுவலகத்தில் கடந்த 10.3.2014 அன்று பதிவு திருமணம் செய்தனர்.
இதனால் கங்காவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கங்காவை மீட்டு தரும்படி அவரது தந்தை இசக்கியப்பன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சுசீந்திரம் துணை ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி கங்கா, அவரது காதலன் சங்கர் ஆகியோரை மதுரை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

அப்போது கங்கா, தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து, கங்கா, அவரது பெற்றோர், காதலன் சங்கர் ஆகியோர் நேற்று மாலை அரசு பேருந்தில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். துணை ஆய்வாளர் ஜெயந்தியும் அவர்களுடன் வந்துள்ளார். நாங்குநேரி டோல்கேட்டில் நேற்றிரவு 11 மணியளவில் பேருந்து வந்தபோது, அங்கு காரில் வந்த 4 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பஸ்சை வழிமறித்து கங்காவை கடத்திச் சென்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காதலன் சங்கர் அக்கும்பலை தடுக்க முயன்றார்.

அவரை சரமாரியாக தாக்கிய கும்பல், கங்காவை கடத்திச் சென்றது. காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கங்காவை கும்பல் கடத்தியபோது பேருந்தில் இருந்த துணை ஆய்வாளார் ஜெயந்தி மற்றும் காவல்துறையினர் அக்கும்பலை தடுக்க முயற்சி செய்யவில்லை.

இதுதொடர்பாக சங்கர், நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் நாககுமாரி விசாரணை நடத்தி கங்காவின் தந்தை இசக்கியப்பன், தாய் லட்சுமி, உறவினர் சுப்பையா மற்றும் துணை ஆய்வாளர் ஜெயந்தி ஆகிய 4பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.

Tags: , ,

Leave a Reply