ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள் கைகோக்க வேண்டும்! டி.அருள் எழிலன் (விகடன்)

mus-srlanka3இலங்கையில் மீண்டும் கலவரக் கனல். இந்த முறை சிங்களர்கள் கொளுத்தியிருக்கும் வன்முறை நெருப்பு, அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக!

‘தமிழர்கள் சிங்களர்களைவிட எண்ணிக்கையில் அதிகரித்து பெரும்பான்மைச் சமூகமாக மாறிவிடுவார்களோ…’ என்ற பயத்தின் விளைவாக, ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்ட இனவெறித் தாக்குதலை, இப்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சிங்களர்கள்.

கடந்த வாரம், இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் களுத்துறை மாவட்டம் மாவனல்லையில், பொதுபல சேனா என்ற சிங்கள அமைப்பு ‘விழித்தெழு’ எனும் பெயரில் கூட்டிய மாநாடும், அதில் ஞானசேர தேரின் உரையும்தான் இப்போதைய கலவரத்துக்குக் காரணம். முஸ்லிம்கள் நிறைந்து வாழும் கடற்கரைப் பிரதேசங்களான தர்கா நகர், அளுத்கம, பேருவளை ஆகிய நகரங்களில் முஸ்லிம்களின் கடைகள், காணிகள், வீடுகள்… என எதையுமே மிச்சம் வைக்காமல் சூறையாடிச் சென்றிருக்கிறார்கள் சிங்கள இனவெறியர்கள். அந்த முரட்டுத் தாக்குதலில் நான்கு முஸ்லிம்கள் பலியாகியிருக்கிறார்கள்.

என்ன நடந்தது?

”முஸ்லிம் மக்கள் செறிவாக வசிக்கும் பிரதேசங்களுக்குள் கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சிங்கள மக்கள் வந்து தாக்குதலை ஆரம்பித்ததும், அரசு ஊரடங்குச் சட்டம் விதித்து முஸ்லிம் மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்தது. ஆண்கள் பள்ளிவாசலிலும், பெண்களும் குழந்தைகளும் வீடுகளுக்குள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், ஓர் இடம்கூட விடாமல் தேடிப் பிடித்துத் தாக்கினார்கள் பொதுபல சேனா அமைப்பினர்.

இந்தத் தாக்குதல்கள் காவல் துறை முன்னிலையிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில்தான், மாவனல்லைப் பகுதியில் மீண்டும் ஒரு பேரணிக்கு அவர்கள் முயன்றபோது முஸ்லிம் மக்கள், நீதிமன்றத்தை அணுகி பேரணிக்குத் தடை பெற்றார்கள். அந்தக் கோபத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரு காவலர்கள் மீது ஆசிட் வீசப்பட்டது. இனி, நாங்கள் இந்த நாட்டின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்க, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!” என்கிறார் மாவனல்லைப் பகுதி ஊடகவியலாளர் எம்.ரிஷான் ஷெரீப்.

ஆனால், ‘தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று பட்டவர்த்தனமாக அறிவித்துவிட்டது ராஜபக்ஷே அரசாங்கம். ‘முஸ்லிம்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்’ என்று பேசிய வட்டரக்க விஜிததேரர் என்ற பௌத்த துறவி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் சிங்களர்கள். வட்ட ரக்க விஜித தேரரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரியபோது, ‘அவர் தன்னைத்தானே தாக்கிக்கொண்டார்’ என்று விசித்திரமான பதிலைச் சொல்லி திகைப்பில் ஆழ்த்தி யிருக்கிறது சிங்களக் காவல் துறை.

இந்தத் தாக்குதல் மற்றும் கலவரம் காரணமாக, உள்நாட்டில் சிக்கலுக்குள்ளாகி இருப்பது, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும்தான். இறுதிப் போரின்போது இலங்கை அரசோடு இணைந்து நின்ற முஸ்லிம் காங்கிரஸுக்கு, அதற்கான பிரதியுபகாரமாக அரசாங்கத்தில் செல்வாக்கான பதவிகளை வழங்கினார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. சமீபத்தில், ‘போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்ற இலங்கை நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம். அவரே, இப்போது இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா விசாரணை கோருவதை வேடிக்கையாகப் பார்க்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.ராஜபக்ஷே அரசில் நீதித் துறை அமைச்சராக உள்ள ரவூப் ஹக்கீம், ‘பதவி விலக வேண்டும்’ என்று முஸ்லிம் மக்களே கோரிக்கை வைக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து ஹக்கீம் என்ன சொல்கிறார் என்று கேட்டேன்…

”சின்னச் சின்னத் தகராறுகள் தனிநபர் மோதல்களை ஊதிப் பெரிதாக்கி, எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடாத இலங்கை முஸ்லிம்களை, வந்தேறிகள், கள்ளத்தோணிகள் என்று இழிவு செய்கிறார்கள் சிங்களர்கள்.அவருடைய அரசில் நீதித்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், நான் சார்ந்த சமூகமே நீதி கேட்டு அலைவது வேதனையாக இருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தை முன்னிட்டு நாங்கள் பதவி விலக வேண்டும் என்று உணர்ச்சிவசப்படுகிறார்கள். இந்த அரசோடு இணைந்து செயல்பட்டு, கடுமையாகப் போராடியே எம் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம். அதுதான் இப்போதைக்கு சமயோசிதமான உபாயம்!” என்கிறார் ரவூப் ஹக்கீம்.

சிறுபான்மைச் சமூகங்களை மோதவிட்டு திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதுதான் சிங்களர்களின் இனவெறி வியூகம் என்பது உலகம் அறிந்த வரலாறு. அந்தச் சதியில் முஸ்லிம்கள் பலியாகாமல் இருக்க, அவர்கள் ஈழத் தமிழர்களோடு கைகோக்க வேண்டும் என்பதே சர்வதேசப் பார்வையாளர்களின் எண்ணம்!

Tags: , ,

Leave a Reply